மதுரை புதிய கலெக்டராக நாகராஜன் பொறுப்பேற்பு ‘தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்’ என பேட்டி
மதுரை மாவட்ட புதிய கலெக்டராக எஸ்.நாகராஜன் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் என்று கூறினார்.
மதுரை,
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் தாசில்தார் சம்பூரணம் உள்பட 4 பேர் அனுமதியின்றி சென்று வந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் 4 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கலெக்டர் நடராஜன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போதே, மதுரை கலெக்டர் நடராஜன் மாற்றப்பட்டு உள்ளதாகவும், புதிய கலெக்டராக நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
அதன்தொடர்ச்சியாக மதுரை மாவட்ட புதிய கலெக்டராகவும், மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் எஸ்.நாகராஜன் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இந்திய தேர்தல் ஆணைய பரிந்துரைப்படி மதுரை மாவட்ட கலெக்டராகவும், மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளேன். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தாலும் திருப்பரங்குன்றம் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நாளை (இன்று) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். எனவே தேர்தல் பணிகளில் முழு கவனம் செலுத்தப்படும்.
மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில், தேர்தல் ஆணைய விதிமுறைப்படி பாதுகாப்பு இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்படும். தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படும்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் கண்காணிப்பு பணியில் 9 பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும். இந்த தொகுதியின் தேர்தல் பார்வையாளர்கள் நாளை (இன்று) வருகிறார்கள். பணப்பட்டுவாடா குறித்து புகார்கள் வந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள எஸ்.நாகராஜன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். 2005–ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதன்பின் ஈரோட்டில் பயிற்சி கலெக்டராகவும், சிவகங்கை மற்றும் சென்னையில் கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றினார். தொடர்ந்து வேலூர், கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கலெக்டராகவும், நில நிர்வாக துறையில் இணை ஆணையராகவும், சுகாதாரத்துறையில் கூடுதல் செயலாளராகவும் பணியாற்றி வந்தார். தற்போது மதுரை மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.