இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: சேலம் ரெயில் நிலையத்தில் 2-வது நாளாக சோதனை
இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று போலீசார் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.
சூரமங்கலம்,
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்கள், ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று 2-வது நாளாக ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் ரெயில்களில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் மூலமாக சோதனை செய்யப்பட்டது. வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா? என அவர்கள் சோதனை செய்தனர்.
சேலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த்குமார் ஆகியோர் தலைமையில் ஜங்ஷன் ரெயில்நிலையம் மற்றும் ரெயில்களில் இந்த சோதனை நடைபெற்றது. மர்ம நபர்கள் யாரேனும் சுற்றி திரிந்தால், அவர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பயணிகளிடம் போலீசார் அறிவுறுத்தினர். மேலும் கார் பார்க்கிங், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளிலும் சோதனை நடந்தது.
தண்டவாளத்தில் ஏதேனும் மர்ம பொருட்கள் கிடக்கிறதா? எனவும், ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? எனவும் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். இதேபோல் ஓமலூர், டவுன் ரெயில் நிலையம், வாழப்பாடி, ஆத்தூர், மகுடஞ்சாவடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் சோதனை நடந்தது.
Related Tags :
Next Story