டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 1323 டன் யூரியா உரம் தஞ்சையில் இருந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது


டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 1323 டன் யூரியா உரம் தஞ்சையில் இருந்து லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து சரக்கு ரெயிலில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு 1,323 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரம் தஞ்சையில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை பொறுத்து குறுவை சாகுபடி அமையும்.வழக்கமாக திறக்கப்படும் ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி அதிகரிக்கும். தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை முடிவடைந்து விட்டது.

பல்வேறு பகுதிகளில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நாற்றங்கால் தயாரிக்கும் பணி, உழவு பணி போன்றவற்றில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்கள், மற்றும் விதை நெல் போன்றவை வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 1,323 டன் யூரியா உரம் நேற்று தஞ்சை வந்தது. சென்னை துறைமுகத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 21 வேகனங்களில் இந்த உரம் தஞ்சை வந்தது.

தஞ்சையில் இருந்து இந்த யூரியா உரம் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த உரமூட்டைகள் அங்கு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

Next Story