நகராட்சி குப்பை கிடங்கில் லாரி மோதி பெண் ஊழியர் பலி டிரைவருக்கு வலைவீச்சு


நகராட்சி குப்பை கிடங்கில் லாரி மோதி பெண் ஊழியர் பலி டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

குருமாம்பேட் நகராட்சி குப்பை கிடங்கில் லாரி மோதி பெண் ஊழியர் இறந்துபோனார். விபத்து ஏற்படுத்திய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மூலக்குளம்,

புதுவை குருமாம்பேட்டில் நகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு புதுவையில் நகரின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வரப்பட்டு கொட்டப்படும். அந்த குப்பைகளை அங்குள்ள ஊழியர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள் என தரம் பிரிப்பார்கள்.

நேற்று மதியம் பெரம்பை கிராமத்தை சேர்ந்த ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு ஊழியர் காயத்திரி (வயது 49) குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மேலும் சில ஊழியர்களும் இருந்தனர்.

அப்போது ஒரு குப்பை லாரி அங்கு வந்தது. லாரியை வானூரை சேர்ந்த பெருமாள் என்பவர் ஓட்டிவந்தார். குப்பை கிடங்குக்கு வந்தபோது பெருமாள், லாரியை பின்நோக்கி ஓட்டினார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு வந்த காயத்திரி மீது எதிர்பாராத விதமாக லாரி மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே லாரியை அப்படியே நிறுத்திவிட்டு டிரைவர் பெருமாள் தப்பி ஓடிவிட்டார்.

படுகாயமடைந்த காயத்திரியை சக ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி காயத்திரி பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் பெருமாளை வலைவீசி தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story