சிறுமிகள் பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்


சிறுமிகள் பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 April 2019 5:00 AM IST (Updated: 29 April 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிகள் பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுச்சேரி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த 2014–ம் ஆண்டு புதுச்சேரியில் 2 சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிவிட்ட கொடுமை அனைத்து பகுதி மக்களையும் வேதனைக்கு உள்ளாக்கிய மோசமான செயலாகும். குழந்தைகள் நலக்குழு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு 9 காவல்துறையினர் மற்றும் சிலர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

குற்றங்களை தடுக்கவும், பொதுமக்கள், பெண்கள் போன்றவர்களுக்கு பாதுகாவலாக செயல்பட வேண்டிய காவல்துறையினர் பலர் இந்த மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது காவல்துறையின் மீது பல கேள்விகளை எழுப்பியது. குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

அந்த சமயத்தில் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவில் இருந்த உயர் அதிகாரி இவ்வழக்கில் தொடர்புடைய 9 காவலர்களை பணிநீக்கம் செய்தார் என்றாலும் இவ்வழக்கை நீர்த்து போகச்செய்யும் வகையில்தான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற குற்றங்களை தடுப்பதற்கு இயற்றப்பட்ட சட்டத்தின் விதிகள்படி இந்த வழக்கை ஓராண்டிற்குள் முடித்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்தும் கடந்த 4 ஆண்டுகளாக குற்றவாளிகளுக்கு சாதகமாக இவ்வழக்கு திட்டமிட்டு காலம் தாழ்த்தப்பட்டது.

மேலும் காவல்துறையின் ஒரு பகுதி, பணபலம் போன்றவற்றால் தற்போது இவ்வழக்கின் குற்றவாளிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தவறான முன்னுதாரணத்திற்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி சமூகத்தில் மேலும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெறுவதற்கு வழிவகை செய்யும். எனவே புதுவை அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் ஆட்சியாளர்கள் உண்மையிலேயே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளை தடுக்கவேண்டும் என்ற அக்கறை உள்ளவர்களாக இருக்கும்பட்சத்தில் உடனடியாக இவ்வழக்கினை மேல்முறையீடு செய்து தொடர்ந்து நடத்திட வேண்டும். குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன்னால் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராஜாங்கம் கூறியுள்ளார்.


Next Story