மேல்பாக்கம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியால் ரெயில்கள் நிறுத்தம் காட்பாடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள்


மேல்பாக்கம் பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணியால் ரெயில்கள் நிறுத்தம் காட்பாடியில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள்
x
தினத்தந்தி 29 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக குறிப்பிட்ட ரெயில்கள் காட்பாடியில் நிறுத்தப்பட்டன. அதன்காரணமாக அந்த ரெயில்களில் வந்த பயணிகள் சென்னை செல்வதற்கு ரெயில் நிலையத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

காட்பாடி,

அரக்கோணம் அருகே மேல்பாக்கம் ரெயில் நிலைய பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. அதற்கு வசதியாக அந்த வழியாக பகல்நேரங்களில் செல்லும் ரெயில்கள் நேற்று காலை காட்பாடியுடன் நிறுத்தப்பட்டன. இதன்படி காட்பாடிக்கு காலை 9.50-க்கு வந்து செல்லும் பெங்களூரு - சென்னை லால்பாக் எக்ஸ்பிரஸ், 11.30 மணிக்கு வந்து செல்லும் கோவை எக்ஸ்பிரஸ், 11.50 மணிக்கு செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் பகல் 12.15 மணிக்கு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட சில ரெயில்கள் நேற்று காட்பாடி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

இந்த ரெயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு சென்று வருகிறார்கள். ரெயில்கள் நிறுத்தப்பட்டதால் அவர்கள் சென்னைக்கு செல்ல மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். காட்பாடி வரை ரெயிலில் வந்து அவர்கள் அங்கிருந்து புதிய பஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதத்தொடங்கியது.

இதையறிந்த போக்குவரத்துக்கழக அதிகாரிகள் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு பஸ்கள் இயக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அரசு பஸ்கள் வரவழைக்கப்பட்டன. காட்பாடி வரை ரெயிலில் வந்த பயணிகள் அங்கிருந்து பஸ்கள் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். பஸ்சில் இடம் பிடிக்க ஒருவருக்கொருவர் முண்டியடித்தனர்.

ரெயில் பயணிகளின் வசதிக்காக காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோன்று நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் சென்னைக்கு சென்ற பயணிகளின் வசதிக்காக வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story