வரி செலுத்தாத 70 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


வரி செலுத்தாத 70 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 29 April 2019 3:45 AM IST (Updated: 29 April 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வரி செலுத்தாத 70 ஆயிரம் பேருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர், 

வேலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய், வீட்டுவரி, மாநகராட்சி கடைகளுக்கான வாடகை உள்பட பல்வேறு வகைகளில் வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் மாநகராட்சிக்கு வரி செலுத்தி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் சரியாக வரி செலுத்தினால் மாநகராட்சிக்கு ஒரு வருடத்திற்கு ரூ.36 கோடி வருவாய் கிடைக்கும்.

ஆனால் பெரும்பாலானோர் குறிப்பிட்ட காலத்திற்குள் வரி செலுத்துவதில்லை. சிலர் வருடக்கணக்கில் வரிபாக்கி வைத்துள்ளனர். இதனால் வரிபாக்கி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு, வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் தற்போது வரி செலுத்தும் அனைவருக்கும் அவர்கள் செலுத்த வேண்டிய வரி குறித்து முன்கூட்டியே நினைவுப்படுத்தும் வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வேலூர் மாநகராட்சியில் வரி செலுத்துபவர்கள் அவர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும், எந்த தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு மாநகராட்சி சார்பில் முதல் கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதே போன்று ஏற்கனவே வரி பாக்கி வைத்திருப்பவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் வரி செலுத்த வேண்டும் என்றும், குறித்த காலத்துக்குள் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story