8 வழிச்சாலையை எந்த ஆட்சி கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பேட்டி


8 வழிச்சாலையை எந்த ஆட்சி கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 29 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 2:26 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலையை எந்த ஆட்சி கொண்டு வந்தாலும் எதிர்ப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பில் ‘8 வழிச்சாலை சவால்களும் - எதிர்கால செயல்பாடுகளும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு திருவண்ணாமலை ஒருங்கிணைப்பாளர் அபிராமன் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தொடக்க உரையாற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், சி.பி.ஐ. (எம்.எல்) மத்திய கமிட்டி உறுப்பினர் பாலசுந்தரம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாநில அமைப்பாளர் சந்திரமோகன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ரவீந்திரன், புரட்சிகர இளைஞர் முன்னணி வக்கீல் கல்விச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

8 வழிச்சாலைக்கு விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிலங்கள் கையகப்படுத்தும் நிலையை அரசு மேற்கொண்டது. தற்போது அரசின் நடவடிக்கை தவறு என்று நிலம் கையகப்படுத்தும் அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்து உள்ளது. இந்த திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும். மீண்டும் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அரசு செயல்பட்டால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மீண்டும் போராட்டங்களை நடத்துவார்கள். அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி துணை நிற்கும்.

தமிழகத்தில் தற்போது வளர்ச்சி என்பதே கிடையாது. எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் அங்கு இருக்கிற சிறு, குறு தொழில்கள் அழிந்து உள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் விசைத்தறி, கைத்தறி போன்றவைக்கு புகழ் பெற்றது. இன்று விசைத்தறியும், கைத்தறியும் அழிந்து விட்டது. பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் கடுமையான வறட்சியினால் விவசாயம் அழிந்து போய் உள்ளது.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் எவ்வளவு ஆபத்தான திட்டங்கள் என்பதை ஏற்கனவே உலகம் முழுவதும் நடத்திய பல ஆய்வுகள் தெரிவித்து உள்ளன. இந்த மாதிரியான திட்டங்கள் மக்கள் வாழ்வாதார பகுதிகளில் செயல்படுத்தக் கூடாது. 8 வழிச்சாலை என்பது அவசியமற்றது. எந்த ஆட்சி இந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி நிருபர்களிடம் கூறுகையில், ‘8 வழிச்சாலைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. 8 வழிச்சாலை திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். 8 வழிச்சாலைத் திட்டத்தில் ஒரு ஹெக்டருக்கு இழப்பீடாக ரூ.9 கோடி தரப்படும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பானது மத்திய, மாநில அரசாணைகளின் வழிகாட்டுதல்படி இல்லை. விவசாயிகளை ஏமாற்றும் வகையிலும், ஒரு மோசடியான முறையில் விவசாயிகளிடம் நிலங்களை பறிக்கக்கூடிய வகையிலும் அறிவிப்பை சேலம் மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். அதனை நீதிமன்றம் கவனத்தில் கொண்டு அவரை கைது செய்ய வேண்டும். மேலும் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்’ என்றார்.

Next Story