விராஜ்பேட்டை அருகே கடமான்களை வேட்டையாடி இறைச்சி கடத்தல்; 6 பேர் கைது துப்பாக்கி, அரிவாள், 2 கார்கள் பறிமுதல்


விராஜ்பேட்டை அருகே கடமான்களை வேட்டையாடி இறைச்சி கடத்தல்; 6 பேர் கைது துப்பாக்கி, அரிவாள், 2 கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 28 April 2019 10:15 PM GMT (Updated: 28 April 2019 9:08 PM GMT)

விராஜ்பேட்டை அருகே கடமான்களை வேட்டையாடி இறைச்சியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, அரிவாள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா கொப்பா அருகே குட்டா பகுதியில் கேரள எல்லையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகேஷ் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக 2 கார்கள் வந்தது. அந்த கார்களை நிறுத்தும்படி போலீசார் கையசைத்தனர்.

அப்போது போலீசாரை பார்த்ததும் 2 கார்களிலும் இருந்தவர்கள், கீழே இறங்கி தப்பியோட முயன்றனர். உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அவர்களை பின்தொடர்ந்து விரட்டி சென்று 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து போலீசார் 2 கார்களிலும் சோதனை செய்தனர். அப்போது அந்த கார்களில் கடமானின் இறைச்சி, துப்பாக்கி, கத்தி, அரிவாள் ஆகியவை இருந்தன. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் பொன்னம்பேட்டை அருகே மாப்பிள்ளைதோடு கிராமத்தை சேர்ந்த சித்திக், சமீர், எப்.யு.சமீர், இஸ்மாயில், யூசுப், முகமது என்பதும், அவர்கள் குட்டா வனப்பகுதியில் கடமான்களை வேட்டையாடி அதன் இறைச்சியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 150 கிலோ கடமான் இறைச்சி, துப்பாக்கி, கத்தி, அரிவாள் மற்றும் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் மீது குட்டா போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் குட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறப்பாக செயல்பட்டு கடமான் இறைச்சியை கடத்தியவர்களை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ.10 ஆயிரம் சன்மானமும் கொடுத்துள்ளார்.

Next Story