நெல்லை, குற்றாலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கண்காணிப்பு


நெல்லை, குற்றாலத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கண்காணிப்பு
x
தினத்தந்தி 29 April 2019 4:45 AM IST (Updated: 29 April 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மற்றும் குற்றாலத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. ஓட்டுப்பதிவு முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. நெல்லை நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியிலும், தென்காசி (தனி) தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியிலும் வைக்கப்பட்டு உள்ளன.

அங்கு வருகிற மே மாதம் 23-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. அதுவரை ஓட்டுப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் அதிகாரி அத்துமீறி சென்றதாக குற்றச்சாட்டு எழுந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த தொகுதி தேர்தல் அதிகாரியும், மதுரை மாவட்ட கலெக்டருமான நடராஜன் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக நாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையொட்டி நெல்லை மற்றும் குற்றாலத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் 6 அறைகளில் பூட்டி சீல் வைக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டு உள்ளன. அந்த அறைக்குள் யாரும் நுழைந்து விடமுடியாதபடி துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுதவிர உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். கல்லூரி வளாகம் முழுவதும் 29 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை பார்வையிடும் வகையில் அனைத்து கட்சி வேட்பாளர்களின் முகவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மதுரை பிரச்சினையையொட்டி நெல்லை, தென்காசி தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. கல்லூரிக்கு வருகிறவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். கல்லூரி அருகில் உள்ள சாலைகளில் அவ்வப்போது வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி முன்பு போலீசார் கண்காணிப்பு கோபுரத்தை நிறுவி உள்ளனர். அதில் இருந்து போலீசார் தொலைநோக்கி மூலம் பார்த்து கண்காணித்து வருகின்றனர். கல்லூரியை சுற்றிலும் கூடுதலாக ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Next Story