சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு


சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 29 April 2019 4:00 AM IST (Updated: 29 April 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுரண்டை, 

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள கீழச்சுரண்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் புன்னைவன சங்கு (வயது 75). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் உள்ளது.

இவர் நேற்று முன்தினம் மாலை தோட்டத்தில் வேலை பார்த்து உள்ளார். வேலை முடிந்ததும் குளிப்பதற்காக கிணற்றிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கிணற்றில் விழுந்துள்ளார். பின்னர் அவர் மூச்சுத்திணறி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவர் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு புன்னைவன சங்கு கிணற்றில் பிணமாக மிதப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் வீரகேரளம்புதூர் போலீசாருக்கும், சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். புன்னைவன சங்கின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story