கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டி பந்தயம் - காளைகள் சீறிப்பாய்ந்தன


கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, இரட்டை மாட்டுவண்டி பந்தயம் - காளைகள் சீறிப்பாய்ந்தன
x

கம்பம் கவுமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இதில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.

கம்பம்,

கம்பத்தில் கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடக்கிறது. அதையொட்டி கம்பம் நகர அனைத்து வேளாளர் மத்திய சங்கம் சார்பில் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி கூடலூர் வரை குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தூரம் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

இதற்கு சங்க தலைவர் முருகேசன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் காந்தவாசன், துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கி போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டிகளில் பங்கேற்க தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்திருந்தன. பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு உள்ளிட்ட பிரிவுகளில் 120-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் பங்குபெற்றன.

போட்டியின்போது காளைகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது காளைகளையும், மாட்டு வண்டியை ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர். போட்டியின் போது வெயில் காரணமாக மாடுகள் சோர்வடையாமல் அதன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தபோட்டியை காண கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். முடிவில் சங்க ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை கம்பம் நகர அனைத்து வேளாளர் மத்திய சங்கத்தினர் செய்திருந்தனர். போட்டியில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு வீரபாண்டி, இன்ஸ்பெக்டர்கள் சுப்புலட்சுமி, பொன்னி வளவன் தலைமையில் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபட்டு இருந்தனர். முன்னதாக போட்டியில் கலந்து கொண்ட காளைகளுக்கு கம்பம் கால்நடை மருத்துவமனையில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர்.

Next Story