மத்தியில் அமைய இருக்கும் அரசு, வணிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டம் - விக்கிரமராஜா அறிவிப்பு
மத்தியில் அமைய இருக்கும் அரசு வணிகர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
விருத்தாசலம்,
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா விருத்தாசலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வருகிற 5-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள 36-வது வணிகர் தின மாநில மாநாட்டில், கடலூர் மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணம், நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் வணிகர்களை சார்ந்தது. அதனை, எந்த நிபந்தனையும் இல்லாமல், தேர்தல் ஆணையம் திருப்பி வழங்க வேண்டும். மேலும், கைப்பற்றப்பட்ட பணத்தின் மூலம் தமிழகத்தின் நீர் ஆதாரங்களை பெருக்கும் வகையில் இங்குள்ள ஏரி, குளங்களை சீரமைக்க வேண்டும். இதற்கென தனியாக அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
மத்தியில் அமைய உள்ள அரசு வணிகர்களின் பிரச்சினைகளுக்கு எங்களை அழைத்து தீர்வு ஏற்படுத்தாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். ஜி.எஸ்.டி. வரி மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தால், தமிழகம் மட்டுமல்லாது அனைத்து சுங்கச்சாவடிகளும் அப்புறப்படுத்தப்படும் என மத்திய மந்திரி நிதின்கட்காரி அறிவித்திருந்தார். ஆனால், ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாயாக வருவாய் அதிகரித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றாமல், அதன் கட்டணம் மட்டும் அதிகரித்துள்ளது. எனவே, அவரது வாக்குறுதியின்படி சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும்.
முத்ரா திட்டத்தின் மூலம் வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வங்கிகளை நாடி செல்லும்போது, கொடுக்க வேண்டிய கடன் தொகை அனைத்தும் முடிந்து விட்டதாகக் வங்கி மேலாளர்கள் கூறுகின்றனர். இதுபோல், விவசாயிகளுக்கும் கடன் வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். எனவே, இப்பிரச்சினைகளை களைய துரிதமாக மாற்று வழியை ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர் சந்த், மாநில துணைத் தலைவர் பழமலை, துணைச் செயலாளர் தங்கராசு, மாவட்ட துணைத் தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
இதில் ஒருங்கிணைப்பாளர் கோபு, மணி, மாவட்ட பொதுச்செயலாளர் வீரப்பன், குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட பொருளாளர் ராஜமாரியப்பன் வரவேற்றார்.
Related Tags :
Next Story