பண்ருட்டி பகுதியில், மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 8 பேர் கைது
பண்ருட்டி பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோரை கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் காடாம்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சாத்திப்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 4 மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, கெடிலம் ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மாட்டு வண்டியை ஓட்டி வந்த கானஞ்சாவடியை சேர்ந்த செல்வராசு(வயது 48), மாயவேல்(50), காணங்குப்பத்தை சேர்ந்த ஏழுமலை மகன் சிவபாலன்(29), உளுந்தூர்பேட்டை தொப்பையான்குளத்தை சேர்ந்த சந்திரகாசபாண்டியன்(38) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் பண்ருட்டி கண்டரக்கோட்டை அருகில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி சென்ற அதே பகுதியை சேர்ந்த கணேசன்(45), குமார், புலவனூரை சேர்ந்த இளங்கோ(25), ராஜ்குமார்(24) ஆகிய 4 பேரை பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் கைது செய்தார். அவர்களிடம் இருந்த மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story