மேட்டுப்பாளையம் அருகே, பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி தவிப்பு - தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்


மேட்டுப்பாளையம் அருகே, பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிக்கி தவிப்பு - தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்
x
தினத்தந்தி 28 April 2019 10:45 PM GMT (Updated: 28 April 2019 11:15 PM GMT)

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் சிக்கி தவித்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் வழியில் வனப்பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று கோவை மற்றும் வெளியூர்களில் இருந்து கிடா வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏராளமான பக்தர்கள் வந்து இருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் யானைகள் நலவாழ்வு முகாம் நடைபெற்ற பகுதியில் உள்ள தேக்கம்பட்டி பம்பு ஹவுஸ் என்ற இடத்திற்கு சென்றனர்.

பின்னர் அவர்களின் சிலர் அருகில் உள்ள பவானி ஆற்றில் குளித்தனர். சிலர் பவானி ஆற்றின் நடுவில் உள்ள மண் திட்டில் அமர்ந்து விளையாடியதாக தெரிகிறது. இந்த நிலையில் பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த பக்தர்களின் 50-க்கும் மேற்பட்டவர்கள் மறுகரைக்கு சென்றனர். சிலர் பவானி ஆற்றின் நடுவில் உள்ள மண் திட்டுகளில் சிக்கி கொண்டனர். இதனால் அவர்கள் அச்சமடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு படையினருக்கும், காரமடை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த காரமடை போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட னர். முதற்கட்டமாக பவானி ஆற்றின் நடுவில் மண்திட்டுகளில் தவித்தவர்களை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர். மறுகரையில் சிக்கி தவித்தவர்களை தீயணைப்பு படைவீரர்கள் பரிசல்காரர்களின் உதவியுடன் 2 பரிசல் மூலம் பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை தீயணைப்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.

மாலை 5 மணிக்கு தொடங்கிய மீட்பு பணி இரவு 9 மணிக்கு முடிந்தது. சுமார் 4 மணி நேரம் போராடி பக்தர்களை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதையடுத்து பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

இதைபோன்று பம்பு ஹவுஸ் பகுதியில் அடிக்கடி நடைபெறுவதாகவும், இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெளியூர்களில் இருந்து வனப்பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் பவானி ஆற்றில் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story