மனித வரலாற்றைக் கூறும் மனித முகத்தின் பரிணாம வளர்ச்சி
உணர்ச்சிகளை தற்கால மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடியும் என்கிறார்கள்
‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்றொரு பழமொழி சொல்வார்கள். அதாவது, உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி போன்றது நம் முகம் என்பதே பழமொழி சொல்லும் கருத்து.
ஆனால், ‘பல லட்சக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்துகொண்டு இருக்கும் மனித முகத்தின் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கினால் அது, பல லட்ச ஆண்டுக்கால மனித வரலாற்றை தெள்ளத்தெளிவாக படம்பிடித்துக் காட்டுகிறது’ என்கிறது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆய்வுக்குழுவினர் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வுக்கட்டுரை ஒன்று.
முக்கியமாக, தொடக்ககால மனித இனமான ஹோமினின் (Hominin) முதல் தற்போதைய மனித இனமான ஹோமோ சேப்பியன்கள் வரை, கடந்த சுமார் நாற்பது லட்சம் ஆண்டு களுக்கு மேலாக, மனித முகத்தின் அமைப்பானது மெல்ல மாறிக்கொண்டே இருந்துள்ளது. மேலும் அத்தகைய தொடர்ச்சியான ஒரு மாற்றத்தின் இறுதி வடிவமே நாம் இன்று காண்கின்ற உலகின் மனித முகங்கள் என்றும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
இதற்கு முந்தைய ஆய்வாளர்கள் கூறியது போலவே, மனித முகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு மனிதர்களின் உணவுப் பழக்கமும், பருவகால மாற்றங்களும் காரணமாக இருந்துள்ளன என்று இந்த புதிய ஆய்வை மேற்கொண்டுள்ள ஆய்வுக்குழுவினரும் கூறியுள்ளனர். ஆனால், இவ்விரண்டு காரணங்கள் தவிர்த்த மற்றுமொரு காரணமும் மனித முகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு முக்கியமான ஒரு காரணமாக இருக்கும் என்கிறார்கள் இந்த சர்வதேச ஆய்வுக்குழுவினர்.
‘சமூகத்தின் தேவை’ (social necessity) என்பதே அந்த மூன்றாவது காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், உணவுப்பழக்கம், சுவாசம் தொடர்பான உடலியல் மற்றும் பருவகால மாற்றங்கள் ஆகிய காரணிகளுடன் சேர்த்து சமூகத்தேவை என்ற மற்றொரு முக்கியமான காரணியும் மனித முகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்பதே இந்த புதிய ஆய்வு முன்வைக்கும் கருத்து என்கிறார் உடற்கூறியல் நிபுணர் பால் ஓ ஹிக்கின்ஸ்.
முகத்தில் உள்ள தோல், எலும்புகள் மற்றும் தசைகளின் உதவியுடன் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வகையான உணர்ச்சிகளை தற்கால மனிதர்கள் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
முக்கியமாக, தற்கால மனித முகங்களுக்கு மட்டுமே உள்ள இந்த பிரத்யேகத் திறன் கடந்தகால மனித இனங்களுக்கு இல்லை என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. சுருக்கமாகச் சொன்னால், கடந்த பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனித முகங்கள் இறுக்கமானதாகவும், மிகவும் குறைவான உணர்ச்சிகள் கொண்டதாகவும் இருந்துள்ளன என்று கூறப்படுகிறது.
ஆனால், மேடு பள்ளங்கள் இல்லாத தட்டையான நெற்றியின் தோற்றம், பரிணாம வளர்ச்சி காரணமாக மனித முகங்கள் அளவில் குறைந்தது மட்டுமல்லாமல், மிகவும் நுணுக்கமான உணர்ச்சிகளான அங்கீகாரம் மற்றும் பரிவு, பரிதாப உணர்ச்சி ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு அவசியமான புருவ நகர்வுகளுக்கு மனித முகத்தில் போதிய இடமும் தோன்றியது என்றும் கூறப்படுகிறது.
மனித முகத்தின் இந்த பரிணாம வளர்ச்சி காரணமாக, சைகைகள் மற்றும் வார்த்தைகள் இல்லாத தகவல் தொடர்பு ஆகியவை தோன்றின என்றும், அதன் காரணமாக மிகப் பெரிய சமூக கூட்டமைப்புகளை உருவாக்கி பின்னர் அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் மனிதனால் முடிந்தது என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ராட்ரிகோ லாக்ரூஸ்.
சைகைகள் மற்றும் வார்த்தையில்லாத தகவல் தொடர்பின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கு மனித முகத்தின் பரிணாம வளர்ச்சியானது ஒரு முக்கியக் காரணமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் இந்த ஆய்வுக்குழுவினர். மேலும், தொடக்ககால ஹோமினின் வகை மனிதர்கள் தங்களின் பற்களால் கடித்து கிழித்து எடுக்கும் அளவுக்கு மிகவும் உறுதியான தாவர உணவுகளையே உண்டு வந்தனர் என்றும், அதற்கு மிகவும் பெரிய தாடை தசைகள் தேவைப்பட்டன என்றும், அதன் காரணமாகவே மிகவும் அகலமான மனித முகங்கள் உருவாகின என்றும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த 20 லட்சம் ஆண்டுகளாக, உணவுப்பொருட்களை உடைப்பது மற்றும் வெட்டுவதற்கு தேவையான கருவிகளை மனிதன் பயன்படுத்த தொடங்கினான் என்றும், அதன் காரணமாக மனித முகங்கள் சுருங்கத் தொடங்கின என்றும் விளக்குகிறார் ஆய்வாளர் பால் ஓ ஹிக்கின்ஸ். அதுமட்டுமல்லாமல், மிகவும் மிருதுவான உணவுப்பொருட்கள் மற்றும் தொழிற்சாலை சமூகத்தின் வளர்ச்சி ஆகியவை காரணமாகவும் மனித முகமானது தொடர்ச்சியாக அளவில் குறைந்துகொண்டே வருகிறது என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மனித முகத்தின் பரிணாம வளர்ச்சிக்கு சில எல்லைகள் உண்டு என்றும், உதாரணமாக மூச்சு விடுவதற்கு மிகப் பெரிய நாசித் துவாரம் தேவைப்படுவது அத்தகைய ஒரு வரையறைகளில் ஒன்று என்றும் விளக்குகிறார் ஹிக்கின்ஸ்.
வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவது மற்றும் இதர பல ஆபத்தான பருவநிலை மாற்றங்கள் மனித முகத்தின் பரிணாம வளர்ச்சியை பாதிக்கும் என்றும், அதன் காரணமாக மனித முகத்தின் தோற்றம் மாற்றத்துக்கு உள்ளாகும் என்றும் கூறப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, மூச்சுக்காற்று நம் நுரையீரலுக்குள் செல்லும் முன்பு அதன் வெப்பத்தையும், ஈரப்பதத்தையும் அதிகரிக்கும் திறன்கொண்ட நாசித் துவாரம் பருவநிலை மாற்றங்கள் காரணமாக சில மாற்றங்களுக்கு உள்ளாகலாம் என்று கூறப்படுகிறது.
நம் உடலின் சில பாகங்களின் அமைப்பை ஆய்வு செய்வதன் மூலமாக, ‘மனித வாழ்க்கையின் நவீனமயமாக்கல்’ எனும் பயணத்தில், மனித உடலானது எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள்.
Related Tags :
Next Story