தலைமை ஏற்போம் வாருங்கள்...


தலைமை ஏற்போம் வாருங்கள்...
x
தினத்தந்தி 29 April 2019 4:12 AM GMT (Updated: 29 April 2019 4:12 AM GMT)

கொள்கைகளை முடிவு செய்யுங்கள்...

சிறந்தத் தலைவராக விரும்புபவர்கள், முதலில் தங்கள் கொள்கைப்பற்றிய விளக்கத்தை தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதனை ‘கொள்கை அறிவிப்பு’ (Manifesto) என்றும் அழைப்பார்கள்.

‘என்னை ஏன் மற்றவர்கள் பின்தொடர வேண்டும்?’ என்ற கேள்வியை ஒருவர் முதலில் தனக்குத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். “என்னை மற்றவர்கள் பின்தொடருவதற்குத் தேவையான என்னென்ன நற்குணங்கள் மற்றும் திறன்கள் என்னிடம் இருக்கிறது? என்ற கேள்விக்கு விரிவான விடையைப் பட்டியலிட்டால், தலை வராக வேண்டியதன் நோக்கம் ஒருவருக்குப் புரியும்.

உங்களால் மற்றவர்களுக்கு எவற்றையெல்லாம் வழங்க முடியும்? உங்கள் நோக்கம் மற்றும் எதிர்காலத்திட்டம் ஆகிய இரண்டும், மற்றவர்களின் நோக்கத்துடனும், எதிர்காலத்திட்டத்துடனும் நெருங்கிய தொடர்பில் உள்ளதா? அவர்கள் ஏன் உங்களைப் பின்தொடர வேண்டும்? என்ற கேள்விகளையும் உங்களுக்குள் கேட்டு சரியான பதிலை தெரிந்துகொள்ள வேண்டும்.

எப்போது? எங்கே? எவ்வாறு? உங்கள் திறன்கள் அவர்களுக்கு உதவியாக அமையும்? என்பதையும் முன்கூட்டியே கண்டறிந்துகொள்ள வேண்டும். உங்களைப் பின்தொடர விரும்புபவர்களிடம், எவ்வாறு உங்களது தகவல் தொடர்பை (Communication) அமைத்துக்கொள்ள வேண்டும்? என்பதையும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

இதன்பின்னர், உங்கள் கொள்கைகளை எவ்வாறு மற்றவர்களிடம் விளக்க வேண்டும்? என்பதற்கான பயிற்சியினையும் மேற்கொள்ள வேண்டும். உங்கள்மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வரும் வகையில் உங்கள் செயல்பாடுகளை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும்? என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும்.

நீங்கள் சொல்லும் சொல், செய்யும் செயல் ஆகிய இரண்டும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமையுமா? என்பதைப் பற்றியும் நீங்கள் “மதிப்பீடு” செய்துகொள்ள வேண்டும்.

உங்கள் கொள்கைகள் என்னென்ன? நீங்கள் எதற்காக தலைமைப் பதவியை விரும்புகிறீர்கள்? உங்களிடமிருந்து என்னென்ன நன்மைகளை உங்களைப் பின்தொடருபவர்கள் பெற முடியும்? உங்களது முக்கியப் பொறுப்பு என்னென்ன? என்பனவற்றை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும்போது, உங்களை “மக்கள் தலைவராக” ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உங்களது கொள்கைகள், எதிர்காலத் திட்டங்கள், தலைமைப் பதவியைப் பெறுவதற்கான நோக்கங்கள் போன்றவைகள் உங்களைப் பின்தொடருபவர்களுக்கு ஏற்றதாக அமையாவிட்டால், உங்களை அவர்கள் தலைவர்களாக அங்கீகரிக்கத் தவறிவிடுவார்கள்.

“நான் ஏன் தலைவராக வேண்டும்?” என்று முடிவு செய்வதற்கு தனது கொள்கைகள் பற்றிய விளக்கங்களை ஒருவர் கண்டிப்பாக மற்றவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதனை “கொள்கை அறிவிப்பு” (Manifesto) என்றும் குறிப்பிடுவார்கள். இதைப்போலவே, ஒரு தலைமையின் கொள்கைகள் என்னென்ன? என்பதையும் தலைவராக விரும்புபவர்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

“கொள்கை” (Policy) என்பது “முடிவுகள் எடுப்பதற்கான சிறந்த வழிகாட்டும் விதிமுறைகள்” என்பதை முதலில் புரிந்துகொள்வது நல்லது.

கொள்கையில்லாத தலைமைகொண்ட ஒரு அமைப்பு, ஓட்டுனர் இல்லாத படகைப்போல திசை தெரியாமல் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். எனவேதான், நிறுவனங்களும், அமைப்புகளும் தங்கள் கொள்கைகளை மிகச்சிறந்ததாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

பொதுவாக, ஒரு கொள்கை என்பது தெளிவானதாகவும், இறுதியானதாகவும் (Definite) இருக்க வேண்டும். அந்தக் கொள்கை, அமைப்பிற்கு நற்பெயரைத் தருவதாக அமைய வேண்டும். சமுதாய நெறிமுறைகளுக்கும், வணிக நெறிமுறைகளுக்கும் ஏற்றதாகவும், அமைப்பின் நலன்கருதி தேவைக்குஏற்ப மாற்றக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

சுதாமூர்த்தி மிகச்சிறந்த தொழிலதிபராக நமக்குத் தெரிந்தவர். இந்தப் பிரபலமான தொழிலதிபரிடம் சிறந்த கொள்கைகளுடன் இணைந்த விடாமுயற்சி இளமையிலேயே இயற்கையாகவே அமைந்திருந்தது, அவரது சிறந்தத் தலைமைக்கு சான்றாக அமைகிறது.

அன்று- பெங்களூரு ஐ.ஐ.டி.யில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர், ஒருநாள் ‘டெல்கோ’ நிறுவனத்தின் வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்தார். “பெண்கள் யாரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டாம்” என அந்த விளம்பர வாசகம் தெரிவித்தது. சுதாமூர்த்திக்கு கோபம் வந்தது.

“பெண்கள் நல்ல வேலைக்கு தகுதி இல்லாதவர்கள் என்று நினைத்து விட்டார்களா?” என எண்ணியபோது வருத்தம் அதிகரித்தது.

உடனே அந்த நிறுவனத்தலைவர் ஜே.ஆர்.டி.டாட்டாவுக்கு கடிதம் எழுதினார்.

“வளர்ந்துவரும் நல்ல நிறுவனமான உங்கள் நிறுவனத்தில், பெண்களை வேலைக்கு சேர்க்கக் கூடாது என்று கொள்கை வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சில வாரங்கள் கழித்து சுதா மூர்த்திக்கு அந்த நிறுவனத்திலிருந்து, விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த அதே வேலைக்கு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது.

நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார். பின்னர், முறையான பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டது. புகழ்பெற்ற அந்த நிறுவனத்தில் “முதல் பெண் அலுவலர்” என்ற பெயர் இன்றும் அவருக்கு உண்டு.

டாட்டா நிறுவனத்தில் 8 ஆண்டுகள் பணிபுரிந்தபின், அந்த நிறுவனத்தைவிட்டு வெளியேற விரும்பி, ‘ராஜினாமா’ கடிதத்தைக் கொடுத்தார்.

இந்தநிலையில் நிறுவனத் தலைவர் டாட்டா, ராஜினாமா செய்த சுதாமூர்த்தியை அழைத்தார்.

“உங்கள் வேலையை நீங்கள் போராடிப் பெற்றீர்கள். பின்னர், ஏன் இந்த வேலையைவிட்டு விலக வேண்டும்?” என்று கேட்டார்.

இன்போஸிஸ் நிறுவனம் பற்றியும், தனது கணவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார் சுதாமூர்த்தி.

அப்போது, “புதிய தொழிலில் நீங்கள் நிறைய சம்பாதித்துவிட்டால், அந்தப் பணத்தை சமுதாயத்திற்கு திருப்பிக் கொடுங்கள். சமுதாயத்தை நீங்கள் அதிகம் நேசித்தால் உங்கள் பணம் சமுதாயத்திற்கு போய்ச் சேரட்டும்” என்றார் டாட்டா.

டாட்டா கூறிய அறிவுரையை மனதில் நிறுத்தி தியாக உணர்வோடு செயல்பட்டார் சுதாமூர்த்தி. தனது சேவைகள் மூலம் இன்று இந்தியாவிலுள்ள பலரின் வாழ்க்கையில் வெளிச்சம் உருவாக்கி, சமுதாய வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.

சிறந்த கொள்கைகளோடு வாழ்வதால், சுதாமூர்த்தியின் இன்போஸிஸ் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெற்றிப் பாதையில் வீறுநடைபோடுகிறது.

நல்ல கொள்கைகள்கொண்ட அமைப்பின் தலைவர்களால் எந்த அமைப்பையும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் புகழ் நிறைந்ததாக மாற்றிக்கொள்ள இயலும்.

- நெல்லை கவிநேசன்


Next Story