வேலூர் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.98 சதவீதம் தேர்ச்சி இந்த ஆண்டும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது


வேலூர் மாவட்டம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.98 சதவீதம் தேர்ச்சி இந்த ஆண்டும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 9:21 PM IST)
t-max-icont-min-icon

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்ட மாணவ - மாணவிகள் 89.98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடத்தை போல இந்த ஆண்டும் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

வேலூர், 

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி முடிந்தது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் நேற்று காலை தங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று அங்கு ஒட்டப்பட்டிருந்த தேர்வு முடிவுகளை ஆர்வமாக பார்த்தனர். அதேபோன்று செல்போனிலும் பார்த்து தெரிந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் 25,274 மாணவர்கள், 25,200 மாணவிகள் என மொத்தம் 50,474 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 21,786 மாணவர்கள், 23,630 மாணவிகள் என மொத்தம் 45,416 மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 89.98 சதவீதமாகும். கடந்த ஆண்டு நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் 88.84 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இந்த வருடம் 1.14 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

ஆனாலும் கடந்த வருடத்தை போன்று இந்த ஆண்டும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வேலூர் மாவட்டம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிக மாணவ - மாணவிகள் தேர்வு எழுதுவதால் வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைந்துவிடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 52,059 மாணவ- மாணவிகள், வேலூர் மாவட்டத்தில் 50,474 மாணவ- மாணவிகள் என 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ- மாணவிகள் இந்த இரண்டு மாவட்டத்தில் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர். முதல் இடத்தை பிடித்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் 29,153 மாணவ- மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் 91.36 சதவீதம் பேரும், ஆங்கில பாடத்தில் 94.17 சதவீதம் பேரும், கணிதத்தில் 93.31 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 96.61 சதவீதம் பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 93.34 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Next Story