எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 9:45 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வை 25,774 மாணவிகளும், 26,285 மாணவர்களும் என மொத்தம் 52,059 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

இதில் சராசரியாக 92.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 0.87 சதவீத மாணவ, மாணவிகள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 95.51 சதவீதமும், மாணவர்கள் 89.45 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா தேர்ச்சி சதவீதத்தை தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்டக்கல்வி அதிகாரிகள் மகேஸ்வரி, தாமோதரன், பிரபாகர், கிருஷ்ணன், மதிவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த 14-3-2019 முதல் 29-3-2019 வரை நடைபெற்றது. இந்த தேர்வில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் அளவில் பொன்னேரி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருத்தணி ஆகிய 5 கல்வி மாவட்டங்களில் மொத்தம் உள்ள 631 பள்ளிகளில் 24,101 மாணவர்கள், 23,426 மாணவிகள் என மொத்தம் 47,527 பேர் தேர்வு எழுதினார்கள். இவர்களில் மாணவர்கள் 21,731 பேரும், மாணவிகள் 22,426 என மொத்தம் 44,157 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் 92.91 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.60 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.31 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருவாய் மாவட்ட அளவில் 38 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 247 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. மாநில அளவில் திருவள்ளூர் மாவட்டம் தற்போது 27-வது இடத்தில் உள்ளது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அலுவலர்கள் இளம்பரிதி, கற்பகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் திருவரசு, மலர்க்கொடி ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story