மாவட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 0.29 சதவீதம் அதிகரிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 96 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட 0.29 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.
தர்மபுரி,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்ட தேர்வு முடிவுகளை முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி வெளியிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் (பாலக்கோடு), சண்முகவேல் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 213 அரசு பள்ளிகள் உள்பட 322 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 137 மாணவர்களும், 10 ஆயிரத்து 489 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 626 பேர் எழுதினார்கள். இவர்களில் 10 ஆயிரத்து 593 மாணவர்களும், 10 ஆயிரத்து 167 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 760 ஆகும்.
தர்மபுரி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் இந்த ஆண்டு 96 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தர்மபுரி மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 95.71 ஆக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவ-மாணவிகளின் தேர்ச்சி 0.29 சதவீதம் அதிகரித்து உள்ளது.
இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி 95.12 சதவீதமாகும். மாணவிகளின் தேர்ச்சி 96.93 சதவீதமாகும். கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 95.22 சதவீத மாணவர்களும், 96.23 சதவீத மாணவிகளும் தேர்ச்சி பெற்று இருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி 0.10 சதவீதம் குறைந்து உள்ளது. மாணவிகளின் தேர்ச்சி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 0.70 சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவிகள் 0.81 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story