மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 98.45 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி மாநில அளவில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் நாமக்கல் மாவட்டத்தில் 98.45 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்டத்துக்கான தேர்வு முடிவுகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டார். அப்போது முதன்மை கல்வி அலுவலர் உஷா உடன் இருந்தார்.
இந்த தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், அந்தந்த பள்ளிகளில் உள்ள விளம்பர பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டு இருந்தன. அவற்றை மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 309 பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 280 மாணவர்கள், 10 ஆயிரத்து 192 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 472 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இவர்களில் 11 ஆயிரத்து 53 மாணவர்கள், 10 ஆயிரத்து 86 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 139 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 98.45 சதவீத தேர்ச்சி ஆகும்.
கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி சதவீதம் 95.08 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி 3.37 சதவீதம் உயர்ந்து, மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் நாமக்கல் மாவட்டம் 3-வது இடத்தை பிடித்து உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கடந்த ஆண்டு மாநில அளவிலான தேர்ச்சி சதவீதத்தில் 19-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 16 இடங்கள் முன்னேறி, 3-வது இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 98.71 சதவீதம் பேரும், ஆங்கிலத்தில் 99.31 சதவீதம் பேரும், கணிதத்தில் 99.11 சதவீதம் பேரும், அறிவியல் பாடத்தில் 99.52 சதவீதம் பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 99.18 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்று இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story