எருமப்பட்டி அருகே தண்ணீர் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
எருமப்பட்டி அருகே சிங்களங்கோம்பையில் தண்ணீர் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நாமக்கல்,
எருமப்பட்டி அருகே உள்ள சிங்களங்கோம்பை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது சிங்களங்கோம்பை. இங்கு சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 600 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் தனிநபர் ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் இருந்து தண்ணீரை எடுத்து தனியார் நூற்பாலை, செங்கல் சூளை மற்றும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வருகிறார். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் குறைந்து உள்ளது. சில கிணறுகளிலும், ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் வற்றிவிட்டது.
டேங்கர் லாரி, டிராக்டர் மற்றும் ஆட்டோக்களில் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதால் சாலைகளும் பழுதடைகின்றன. இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், லாரி டிரைவர்கள் எங்கள் பகுதி மக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே தனிநபர் தண்ணீர் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் கிராமத்தில் தண்ணீர் விற்பனை தடைக்கான அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story