குழந்தைகள் விற்பனை வழக்கு: பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்து இருந்தால் கடும் நடவடிக்கை நாமக்கல் கலெக்டர் ஆசியா மரியம் பேட்டி
குழந்தைகள் விற்பனை வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவது தொடர்பாக சமீபத்தில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில், குழந்தைகளின் நிறம், ஆரோக்கியத்தை வைத்து விலை நிர்ணயம் செய்யப்படுவதாகவும், அதற்கு பிறப்பு சான்றிதழ் பெற ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்பது போலவும் உரையாடல் அமைந்து இருந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசார் ராசிபுரத்தை சேர்ந்த விருப்ப ஓய்வுபெற்ற பெண் செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி (வயது 50), அவரது கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் 5 புரோக்கர்கள் என மொத்தம் 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 14 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதற்கிடையே விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் கொல்லிமலையில் வாங்கப்பட்டு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து கொல்லிமலை மற்றும் ராசிபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து, போலியாக பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்க விரும்புவோர், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கலாம். அந்த வகையில் கடந்த ஆண்டு நமது மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு 4 குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் குழந்தை வேண்டாம் என்று சொல்பவர்கள் அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் முறையாக விட்டு செல்ல வேண்டும்.
நமது மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இல்லங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டு வருகின்றன. விதிமுறைகளை பின்பற்றாத 5 இல்லங்கள் ஏற்கனவே மூடப்பட்டு விட்டன. எனவே அந்த இல்லங்களுக்கும் குழந்தைகள் விற்பனைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது குழந்தைகள் விற்பனை இருதரப்பு பெற்றோர் ஒப்புதலுடன் தான் நடைபெற்று இருப்பதாக தெரிய வருகிறது. இவ்வழக்கை முன் உதாரணமாக எடுத்து கொண்டு பொதுமக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும்.
விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு போலியாக பிறப்பு சான்றிதழ் பெறப்பட்டு இருப்பதாகவும் கைதானவர்கள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விசாரணை நடத்த சென்னையில் இருந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வர உள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அரசு அலுவலர்களுக்கு பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்தால் வேலை போய் விடும் என தெரிவித்து உள்ளோம். பிறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே குழந்தைகள் விற்பனை தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஓரிரு நாட்களில் ராசிபுரம் போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story