தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் விலங்குகள், பறவைகளின் தாகத்தை தீர்க்க 2,400 சதுர அடியில் குளம்


தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் விலங்குகள், பறவைகளின் தாகத்தை தீர்க்க 2,400 சதுர அடியில் குளம்
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 30 April 2019 12:29 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில், விலங்குகள், பறவைகளின் தாகத்தை தீர்க்க 2,400 சதுர அடி பரப்பளவில் ரூ.1 லட்சத்தில் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் 1981-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தை அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். 972.7 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கினார். இங்கு கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப்புலம், மொழிப்புலம், அறிவியல்புலம் ஆகிய 5 புலங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு என்ற சொல்லின் எழுத்துக்களை போன்று கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்த வளாகத்தில் தற்போது கலெக்டர் அலுவலக வளாகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது 825 ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் 358 வகையான செடி, கொடி, மரங்கள் உள்ளதால் அடர்ந்த சோலையாக காட்சி அளிக்கிறது. மேலும் இங்குள்ள கட்டிடங்களை சுற்றிலும் மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதில் 179 மர வகைகள் உள்ளன. இதில் தைலமரங்கள் அதிக அளவில் உள்ளன.

இது தவிர இங்கு 294 வகையான பறவை இனங்களும், 39 வகையான வண்ணத்து பூச்சிகளும் வசித்து வருகின்றன. இதில் மயில்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்தும் பறவைகள் வந்து செல்கின்றன. இங்கு மூலிகை செடிகள், மரங்கள், கொடிகளால் சுகாதாரமான காற்று வீசுவதால் இந்த பகுதிகளில் நடைப்பயிற்சி செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தவிர முயல், கீரிப்பிள்ளை, குரங்குகள், நரி போன்ற சில விலங்குகளும் வசித்து வருகின்றன.

இந்த பல்கலைக்கழக பகுதிகளில் முன்பு ஆங்காங்கே தண்ணீர் காணப்பட்டது. இந்த வளாகத்தில் 100 அடி ஆழம் வரையிலான 6-க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் தண்ணீரும் இருந்தது. நாளடைவில் இந்த கிணறுகள் வறண்டு விட்டன. தற்போது ஆழ்துளை கிணறுகள் அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகின்றது. ஆங்காங்கே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த பகுதியில் உள்ள பறவை இனங்கள், விலங்குகள் கடுமையாக அவதிக்குள்ளாகின. மழைகாலங்களில் ஆங்காங்கே தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி வந்தாலும், கோடைகாலத்தில் குடிநீர் குழாய்கள் உள்ள பகுதிக்கு குடிநீருக்காக பறவைகள், விலங்கினங்கள் வந்தன.

இதனைப்பார்த்த துணைவேந்தர் பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக வளாகத்தில் பறவை, விலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் ஒரு சிறிய குளத்தை வெட்ட முடிவு செய்தார். அதன்படி 2,400 சதுர அடி பரப்பளவில், 3 அடி ஆழத்தில் ரூ.1 லட்சம் செலவில் கரிகால்சோழன் கலையரங்கம் அருகே குளம் வெட்டப் பட்டுள்ளது.

இந்த குளம் இயற்கையாக அமைந்தது போல குளத்தின் அடிப்பகுதியில் வெளிஇடங்களில் இருந்து களிமண் வாங்கி வந்து போடப்பட்டுள்ளது. மேலும் குளத்தின் சுவற்றிலும் களிமண் பரப்பப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 அடி உயரத்திற்கு தண்ணீர் நிற்கிறது. இந்த குளத்திற்கு நீர்த்தேக்க தொட்டி மூலம் குழாய் வழியாக ஒரு நாளைக்கு 2 முறை தண்ணீர் விடப்படுகிறது. இதைத்தொடர்ந்து பறவைகள், விலங்குகள் எந்தவிதமான தடையுமின்றி தண்ணீரை குடித்து வருகின்றன.

Next Story