வேறு பெண்ணுடன் சென்ற கணவரை மீட்டுத்தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி புகார்


வேறு பெண்ணுடன் சென்ற கணவரை மீட்டுத்தர வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கர்ப்பிணி புகார்
x
தினத்தந்தி 30 April 2019 4:45 AM IST (Updated: 30 April 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

வேறு பெண்ணுடன் சென்ற தனது கணவரை மீட்டுத்தர வேண்டும் என்று 5 மாத கர்ப்பிணி கண்ணீர் மல்க சேலம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

சேலம், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சுமதி. இவர்களது மகள் இளவரசி (வயது 21). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சேலம் மாவட்டம் கொளத்தூர் கீழ்மூலப்பாறைகாட்டு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் கார்த்திக். இவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இரு குடும்பத்தினரும் உறவினர்கள் ஆவார்கள். அதன்படி இளவரசிக்கு, கார்த்திக் மாமன் உறவு முறையாகும்.

இந்த நிலையில் இளவரசி, நேற்று காலை தனது பெற்றோருடன் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் தனது கோரிக்கை அடங்கிய மனுவை போட்டார். பின்னர் மனு குறித்து அவர் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

மாமன் உறவு முறையான கார்த்திக் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினோம். என்னை திருமணம் செய்து கொள்வதாக கார்த்திக் என்னிடம் கூறினார். இதனால் அவரது ஆசைக்கு இணங்கினேன். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன்.

ஆனால் அவர் என்னை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கடந்த 11.2.2019 அன்று திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீசில் நான் புகார் கொடுத்தேன். அப்போது போலீசார் கார்த்திக் மற்றும் அவரது பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர்.

இதையொட்டி அன்று இரவே நாங்கள் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டோம். பின்னர் கீழ்மூலப்பாறைகாட்டூரில் உள்ள எனது கணவர் வீட்டில் குடும்பம் நடத்தி வந்தேன். நான் போலீசில் புகார் கொடுத்ததால் என் மீது எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் கோபத்தில் இருந்தனர். இதனால் திருமணத்துக்கு பிறகு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் என்னை துன்புறுத்த தொடங்கினர்.

இந்தநிலையில் கடந்த 8.3.2019 அன்று எனது கணவர் காணாமல் போய் விட்டார். எனது கணவர் கார்த்திக், பவானி குமாரபாளையம் கணபதி நகரை சேர்ந்த மைதிலி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார் என்று, எனது மாமனார் சரவணன் என்னிடம் கூறினார். எனவே என்னை 5 மாத கர்ப்பிணியாக்கி விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் சென்று தலைமறைவாக உள்ள எனது கணவர் கார்த்திக்கை மீட்டுத்தர வேண்டும். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story