ஏற்காட்டில் காபி செடிகள் பூக்க தொடங்கின


ஏற்காட்டில் காபி செடிகள் பூக்க தொடங்கின
x
தினத்தந்தி 29 April 2019 9:30 PM GMT (Updated: 29 April 2019 7:09 PM GMT)

ஏற்காட்டில் காபி செடிகள் பூக்க தொடங்கி உள்ளன.

ஏற்காடு,

மலைப்பகுதியில் அமைந்துள்ள ஏற்காட்டில் காபி சாகுபடி முக்கிய விவசாயமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் காபி சீசன் தொடங்கும். அப்போது காபி செடிகளில் பழங்கள் அதிகளவில் பழுத்து இருக்கும்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான காலத்தில் பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது. குறிப்பாக மே மாதங்களில் காபி பழங்களை பார்ப்பதே அரிதாகி விட்டது என்றே கூறலாம். இதனால் காலம் கடந்து தான் காபி பழங்கள் பழுத்தன. இதன் காரணமாக உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்தனர். அதே நேரத்தில் விளைச்சல் குறைவால் சிறு விவசாயிகள் பலர் தங்களது நிலங்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்த நிலையில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சரியான நேரத்தில் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இதனால் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து காபி வாரிய அதிகாரிகள் கூறும் போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளன. இன்னும் 10 நாட்களுக்குள் மீண்டும் ஒரு சில தினங்கள் மழை பெய்தால் காபி விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று கூறினார்கள்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறும் போது, காபி செடிகளில் பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால், மீண்டும் எப்போது மழை பெய்யும் என்று காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை பெய்யும் பட்சத்தில், காபி செடிகளில் காய் பிடிக்க தொடங்கி விடும். இதன் மூலம் இந்த ஆண்டு காபி பழங்களின் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்றனர்.

இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. காபி செடியில் பூ பூத்திருப்பது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்திழுக்கிறது. அவர்கள் காபி பூக்கள் முன்பு நின்று ‘செல்பி‘ எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Next Story