புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கார் டிரைவர் கைது


புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு கார் டிரைவர் கைது
x
தினத்தந்தி 30 April 2019 3:30 AM IST (Updated: 30 April 2019 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே டீக்கடை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள குலையன்கரிசல் கீழத்தெருவை சேர்ந்தவர் வேல்பாண்டியன் (வயது 55). இவர் குலையன்கரிசல் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் பட்டுலிங்கம் மகன் சத்தியராஜ் (26) கார் டிரைவர். இவர் மீது புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேல்பாண்டியன் வளர்த்து வரும் நாய், சத்தியராஜை கடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சத்தியராஜ், வேல்பாண்டியனை கண்டித்தார். இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சத்தியராஜ் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து பீர்பாட்டிலில் பெட்ரோல் பிடித்து, பெட்ரோல் குண்டு தயாரித்து வேல்பாண்டியன் வீட்டின் மீது எறிந்தார். ஆனால் அந்த பெட்ரோல் குண்டு வீட்டின் மீது படாமல் வீட்டுக்கு முன்பு உள்ள தரையில் விழுந்தது. பெட்ரோல் குண்டு உடையாததால் தீ விபத்து ஏற்படவில்லை.

இதனை அறிந்த வேல்பாண்டியன் புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்து சத்தியராஜை கைது செய்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story