ஸ்ரீவைகுண்டம் அருகே பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை பழிக்குப்பழியாக 7 பேர் கும்பல் வெறிச்செயல்
ஸ்ரீவைகுண்டம் அருகே பழிக்குப்பழியாக வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 7 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டது.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இசக்கி மகன் சங்கரபாண்டி (வயது 32), அர்ச்சுணன் மகன் நம்பி (27), சிவனு மகன் மாயாண்டி (27). விவசாய கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
கால்வாய் கிராமத்தில் உள்ள கோவிலில் கொடை விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு, சங்கரபாண்டி, நம்பி, மாயாண்டி ஆகிய 3 பேரும் நேற்று மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டம் சென்று, தங்களது வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். பின்னர் அவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தங்களது கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம்-நெல்லை மெயின் ரோட்டில் சுப்பிரமணியபுரம்-ஆதிச்சநல்லூர் இடையே காட்டு பகுதி வழியாக சென்றபோது, அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மறைந்து இருந்த 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கரபாண்டி, நம்பி, மாயாண்டி ஆகிய 3 பேரும் சாலையிலேயே மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு, அருகில் உள்ள விவசாய நிலம் வழியாக தலைதெறிக்க தப்பி ஓடினர்.
ஆனாலும் அந்த கும்பல் ஓட, ஓட விரட்டிச் சென்று, சங்கரபாண்டியை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் அவரது கால் துண்டானது. அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
பின்னர் அந்த கும்பல் நம்பியையும் விரட்டிச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த நம்பியும் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். அந்த கும்பலிடம் சிக்காமல் மாயாண்டி அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடி விட்டார்.
ஸ்ரீவைகுண்டம்-நெல்லை மெயின் ரோட்டின் அருகில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ், இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய சங்கரபாண்டி, நம்பி ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரபாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த நம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக சங்கரபாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட சங்கரபாண்டியின் அக்காள் நம்பிகண்ணு. இவருக்கும், ஆழ்வார்திருநகரி அருகே மளவராயநத்தத்தைச் சேர்ந்த விவசாயி பொன் இசக்கிக்கும் திருமணம் நடந்தது. கடந்த 2014-ம் ஆண்டு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பொன் இசக்கி தன்னுடைய மனைவி நம்பிகண்ணுவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார்.
தன்னுடைய அக்காள் நம்பிகண்ணு கொலை செய்யப்பட்டதை அறிந்து சங்கரபாண்டி ஆத்திரம் அடைந்தார். அவர் 4 மாதங்களில் தன்னுடைய அக்காளின் கணவர் பொன் இசக்கி, அவருடைய தந்தை அங்கமுத்து ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இந்த இரட்டைக் கொலை வழக்கு ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. சில மாதங்கள் சிறையில் இருந்த சங்கரபாண்டி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் சங்கரபாண்டியை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. எனவே பொன் இசக்கி, அங்கமுத்து இரட்டைக் கொலைக்கு பழிக்குப்பழியாக சங்கரபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?, இதில் கூலிப்படையினருக்கு தொடர்பு உண்டா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கரபாண்டி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கால்வாய் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story