மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் கோரிக்கை
மதமாற்றம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திரு விழாவின் போது, புறவழிச் சாலையை மூடுவதால் அரசு பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. திருவிழாவுக்கு புறவழிச்சாலையில் இருந்து கோவில் வரையுள்ள சுமார் 2 கிலோமீட்டர் தூரம் போதுமானது.
எனவே, திருவிழா காலங்களில் புறவழிச்சாலையில் போக்குவரத்து தடை செய்யக்கூடாது. புறவழிச்சாலையை எப்போதும் போல் திறந்து விட்டு, கோவிலுக்கு பிரிந்து செல்லும் சாலையில் மட்டும் போக்குவரத்தை தடை செய்தால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கும். கடந்த ஆண்டு இதுகுறித்து கோரிக்கை வைத்தபோது திருவிழாவின் கடைசி ஒரு நாள் மட்டும் சோதனை முயற்சியாக புறவழிச்சாலை திறக்கப்பட்டது. அப்போது எந்த சிரமமும் ஏற்படவில்லை. எனவே, இதுபோல் இந்த ஆண்டும் திருவிழா காலங்களில் புறவழிச்சாலையில் வாகனங்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல், இந்து எழுச்சி முன்னணி அமைப்பின் மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமியிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘நேற்று முன்தினம் அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெருவில் உள்ள ஒரு பள்ளியில் நீதிபோதனை என்ற பெயரில் ஒரு அமைப்பினர் மத மாற்ற பிரசாரம் செய்தனர். அல்லிநகரம் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இதுபோன்று இந்து தெய்வங்களை இழிவாக பேசி, மதமாற்றம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story