எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் மாவட்டத்தில் 93.55 சதவீதம் தேர்ச்சி - கடந்த ஆண்டை விட பின்னடைவு
எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் தேனி மாவட்டத்தில் 93.55 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேனி,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 203 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 104 மாணவர்கள், 7 ஆயிரத்து 754 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 858 பேர் எழுதினர்.
தேர்வு எழுதியவர்களில் 7 ஆயிரத்து 404 மாணவர்கள், 7 ஆயிரத்து 424 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 91.36 சதவீதம் ஆகும். மாணவிகள் தேர்ச்சி விகிதம் 95.74 சதவீதம். மொத்த தேர்ச்சி விகிதம் 93.55 சதவீதம் ஆகும்.
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், பெரியகுளம், தேனி ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் உள்ளன. உத்தமபாளையம் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 377 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 116 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 95.14 சதவீதம் ஆகும்.
பெரியகுளம் கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 277 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 912 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 91.46 சதவீதம் தேர்ச்சி ஆகும். தேனி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 204 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 5 ஆயிரத்து 800 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது, 93.48 சதவீதம் தேர்ச்சி ஆகும்.
தேனி மாவட்டம் கடந்த கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 97.72 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது. கடந்த ஆண்டைவிட தற்போதைய தேர்ச்சி விகிதம் 4.17 சதவீதம் குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு தமிழக அளவில் தேர்ச்சி விகிதத்தில் 7-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு சுமார் 18 இடங்கள் பின்தங்கி, 25-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து கூறுகையில், ‘தேர்வு 100 சதவீதம் நேர்மையாக நடத்தப்பட்டது. 4.17 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்து உள்ளது. சிறிய புள்ளி விவரங்கள் அடிப்படையில் சில மாவட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளன. தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து நாளை (இன்று) அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் கல்வியாண்டு தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக மேற்கொள்ளப்படும்’ என்றார்.
தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன. பள்ளிகளிலும் அறிவிப்பு பலகைகளில் தேர்வு முடிவுகள் ஒட்டப்பட்டு இருந்தன. அதனையும் மாணவ, மாணவிகள் வந்து பார்த்து சென்றனர்.
Related Tags :
Next Story