மானாமதுரை மின்வாரியத்தில் மும்முனை இணைப்பிற்கு அதிக கட்டணம் வசூல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


மானாமதுரை மின்வாரியத்தில் மும்முனை இணைப்பிற்கு அதிக கட்டணம் வசூல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 April 2019 4:00 AM IST (Updated: 30 April 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை தாலுகாவில் மின் இணைப்பு, மும்முனை இணைப்பு உள்ளிட்டவைகள் வழங்க அதிக கட்டண வசூலை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மானாமதுரை,

மானாமதுரை கோட்டத்தின் கீழ் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பாச்சேத்தி உள்ளிட்ட துணைமின்நிலையங்கள்உள்ளன. மானாமதுரை கோட்டத்தில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் வீட்டு இணைப்பு, வர்த்தக ரீதியான இணைப்பு, தொழிற்சாலைகள், விவசாய இணைப்பு உள்ளிட்டவைகள் அடங்கும்.

இந்த கோட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் மின் இணைப்புகள் வழங்கவும், பெயர் மாற்றவும், மும்முனை இணைப்பு வழங்க அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்யப்படுவதாகவும், மேலும் கூடுதல் தொகை கொடுப்பவர்களுக்கு மட்டுமே இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அரசுக்கு உரிய கட்டணம் செலுத்தினாலும் மின் இணைப்பு வழங்கப்படுவது இல்லை. கூடுதல் பணம் கொடுக்க மறுப்பவர்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்படுவது இல்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வீடுகளுக்கு மும்முனை இணைப்பு வேண்டி மின்வாரியத்திடம் விண்ணப்பிக்கப்பட்டால், மின்வாரிய அதிகாரிகள் 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த அறிவுறுத்துகிறார்கள். ஆனால் ஊரக பிரிவிற்கு சென்று அதிகாரிகள் கூறிய பணத்தை கட்டினால், அதற்கான ரசீது தரப்படுவதில்லை. பணத்தை கட்டியவர்கள் ரசீது கேட்டால் தர முடியாது என்கின்றனர், உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பயனில்லை என்றனர்.

இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மும்முனை இணைப்பிற்கு அதிகபட்சமாக 6 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வரும், 10 ஆயிரம் ரூபாய் வர வாய்ப்பில்லை. ரசீது கண்டிப்பாக கொடுத்து இருப்பர்கள். அப்படியே ரசீது இல்லை என்றாலும் கட்டணம் குறித்து ஆன்லைனில் சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரிபார்த்து கொள்ளலாம் என்றனர்.

மானாமதுரை மின்வாரியத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story