குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு ரூ.80 கோடியில் தங்க ரதம் : முதல்-மந்திரி குமாரசாமி முடிவு


குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு ரூ.80 கோடியில் தங்க ரதம் : முதல்-மந்திரி குமாரசாமி முடிவு
x
தினத்தந்தி 29 April 2019 11:00 PM GMT (Updated: 29 April 2019 11:00 PM GMT)

குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு ரூ.80 கோடியில் தங்க ரதம் உருவாக்க முதல்-மந்திரி குமாரசாமி முடிவு செய்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் உள்ள குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு தங்க ரதம் வழங்குவது தொடர்பாக ஊடகங்களில் பல்வேறு விதமான செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த கோவிலுக்கு தங்க ரதம் வழங்குவது குறித்து கடந்த 2005-ம் ஆண்டே முடிவு செய்யப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் ரூ.15 கோடியில் அந்த ரதத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அந்த கோவிலில் உள்ள தங்கத்தை சேர்த்து, மீதம் தேவைப்படும் தங்கத்தை வங்கிகளில் வாங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த ரதத்தை உருவாக்க அரசின் நிதியை பயன்படுத்தாமல், பொதுமக்களிடம் இருந்து நிதி சேகரிப்பு மற்றும் அந்த கோவிலின் நிதி ஆதாரங்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டது.

சமீபத்தில் அந்த கோவில் நிர்வாகிகள் என்னை சந்தித்து, தங்க ரதம் உருவாக்குவது குறித்து கோரிக்கையை முன்வைத்தனர். தங்க ரதத்தை உருவாக்க ஆகும் செலவு, ேதவைப்படும் நிதி குறித்து திட்ட அறிக்கையை தயாரித்து மந்திரிசபை கூட்டத்தில் தாக்கல் செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி தங்க ரதம் உருவாக்க ரூ.80 கோடி செலவாகும் என்றும், இந்த ரதத்தை உருவாக்கி கொடுக்க குமாரசாமி முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Next Story