10–ம் வகுப்பு தேர்வு முடிவு: கடின உழைப்பால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது; முதல்–அமைச்சர் நாராயணசாமி பாராட்டு


10–ம் வகுப்பு தேர்வு முடிவு: கடின உழைப்பால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது; முதல்–அமைச்சர் நாராயணசாமி பாராட்டு
x
தினத்தந்தி 29 April 2019 11:30 PM GMT (Updated: 29 April 2019 11:03 PM GMT)

கடின உழைப்பால் 10–ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரி,

முதல்–அமைச்சர் நாராயணசாமி அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

10–ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த மார்ச் மாதத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 16 ஆயிரத்து 520 மாணவ–மாணவிகள் தேர்வை எழுதினார்கள். இதில் 16 ஆயிரத்து 119 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

97.57 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3.20 சதவீதம் அதிகம் ஆகும். அரசுப்பள்ளிகளை மட்டும் எடுத்துக்கொண்டால் இந்த கல்வி ஆண்டில் மொத்தம் 5 ஆயிரத்து 654 மாணவ, மாணவிகள் எழுதியதில் 5 ஆயிரத்து 363 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 94.85 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 88.06 ஆகத்தான் இருந்தது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை 98.99 சதவீதம் தேர்ச்சியை அடைந்துள்ளது.

புதுச்சேரி பகுதியில் மட்டும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் இந்த ஆண்டு தேர்ச்சி 98.01 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட 3.32 சதவீதம் அதிகமாகும். காரைக்காலை பொறுத்தவரை இந்த ஆண்டு தேர்ச்சி 95.26 சதவீதமாகும். இது கடந்த ஆண்டைவிட 2.61 சதவீதம் அதிகமாகும்.

எவ்வளவு தடைகள் இருந்தபோதும் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், கல்வித்துறை அதிகாரிகள், கல்வித்துறை செயலாளர், கல்வி அமைச்சர் ஆகியோரின் தொடர்ச்சியான கண்காணிப்பிலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடைய கடின உழைப்பாலும் இந்த தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த முன்னேற்றத்துக்காக அனைவருக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமி பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story