பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம், பாதிக்கப்பட்ட பெண்களிடம் சி.பி.ஐ. போலீசார் விசாரணை
பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் சி.பி.ஐ. போலீசார் பொள்ளாச்சியில் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முதல் கட்ட விசாரணையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்கள்.
கோவை,
பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு சி.பி.ஐ. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதுதொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருநாவுக்கரசு (வயது 26), சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோர் தன்னை பலவந்தப்படுத்தி மானபங்கம் செய்ததுடன் அவர்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டினார்கள் என்று பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந் தேதி அன்று மிரட்டி அடித்ததற்காக அவரது புகாரின் பேரில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் இந்த 4 பேரும் பல்வேறு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து எடுத்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்குகளும் மேல் விசாரணைக்காக கடந்த மார்ச் 12-ந் தேதி சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த மார்ச் 16-ந் தேதி ஆணை பிறப்பித்தது.
சி.பி.ஐ. விசாரணையை தொடங்குவதற்கு முன்பு சி.பி.சி.ஐ.டி. தென்மண்டல எஸ்.பி. நிஷா பார்த்திபன் இந்த வழக்கில் புலன்விசாரணை மேற்கொண்டு 40 சாட்சிகளை விசாரித்தார். அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் மற்றும் வழக்கு சொத்துகளும் கைப்பற்றப்பட்டு தமிழக தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் சி.பி.சி.ஐ.டி.யிடம் இருந்து சி.பி.ஐ. வசம் இன்று(நேற்று) ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. போலீஸ் ஐ.ஜி. விப்ளவ் குமார் சவுத்ரி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைமணி, இன்ஸ்பெக்டர் விஜயா வைஷ்ணவி மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தனர். அதன்பின்னர் அவர்கள் இரவில் காரில் பொள்ளாச்சி சென்று விசாரணை நடத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை
கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்கார வழக்கில் முதன்முதலில் புகார் தெரிவித்த கல்லூரி மாணவியை குற்றம் சாட்டப்பட்ட திருநாவுக்கரசு உள்பட 4 பேர் காரில் அழைத்துச் சென்று அந்த மாணவி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் இறக்கி விட்டு விட்டு சென்றனர். அந்த இடத்துக்கு இரவில் சி.பி.ஐ. போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த மாணவியிடமும் அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
மேலும் பாலியல் பலாத்கார விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சில பெண்களையும் ரகசிய இடத்தில் வைத்து சி.பி.ஐ. போலீசார் விசாரித்தனர். அந்த பெண்கள் கூறிய விவரங்களை அவர்கள் பதிவு செய்து கொண்டனர். மேலும் சமூக வலைதளங்களில் பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக பரவிய வீடியோக்கள் என்ன? அந்த வீடியோக்களை முதலில் பதிவேற்றம் செய்தது யார்? அந்த வீடியோக்கள் உண்மையானது தானா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.ஐ. போலீசார் பொள்ளாச்சியில் விசாரணை நடத்தியது ரகசியமாக வைக்கப்பட்டது. உள்ளூர் போலீசாருக்கே அவர்கள் வந்து சென்றது தெரியவில்லை.
அதன்பின்னர் இந்த வழக்கை முதலில் விசாரித்த பொள்ளாச்சி போலீசாரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் கோவை திரும்பினார்கள். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் கோவையில் 2 அல்லது 3 நாட்கள் முகாமிட்டு விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் முதல் கட்ட விசாரணையை முடித்துக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் சென்னை திரும்பினார்கள்.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பொள்ளாச்சி பாலியல் பலாத்கார விவகாரம் தொடர்பாக கைதானவர்கள் மற்றும் ஜாமீனில் இருப்பவர்களிடம் சி.பி.ஐ. போலீசார் அடுத்த கட்டமாக விசாரணை நடத்த உள்ளனர். இதற்கான கோர்ட்டு அனுமதி உள்பட பல்வேறு சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் சிறையில் இருப்பவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும், ஜாமீனில் வெளியே உள்ளவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் சி.பி.ஐ. போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அடுத்த கட்ட விசாரணைக்காக எப்போது வருவார்கள் என்று தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story