நாடாளுமன்ற தேர்தல்: மும்பையில் வாக்களித்த அரசியல் தலைவர்கள்


நாடாளுமன்ற தேர்தல்: மும்பையில் வாக்களித்த அரசியல் தலைவர்கள்
x
தினத்தந்தி 30 April 2019 5:10 AM IST (Updated: 30 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மும்பையில் சரத்பவார், உத்தவ் தாக்கரே, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் வாக்களித்தனர்.

மும்பை, 

நிதிதலைநகரான மும்பையில் பிரபல அரசியல் கட்சி தலைவர்களும், தொழில் அதிபர்களும் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று மும்பையில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆர்வமாக வாக்களித்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தார்டுதேவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை செலுத்தினார். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மனைவி ராஷ்மி தாக்கரே, மகன் ஆதித்ய தாக்கரேவுடன் பாந்திரா காந்திநகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் வாக்கை பதிவு செய்தார்.

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே சிவாஜி பார்க்கில் உள்ள வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமையாற்றினார். மத்திய மந்திரி பியூஸ் கோயல் மலபார் ஹில்லில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டுப்போட்டார்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி கணவருடன் வெர்சோவாவில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்தாதாஸ் பெடர் ரோட்டில் ஓட்டுப்போட்டார். காலை 7.15 மணி அளவில் தொழில் அதிபர் அனில் அம்பானி கப்பரடே பகுதியில் தனது வாக்கை செலுத்தினார்.

மகேந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மகேந்திரா மலபார்ஹில்லில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டுப்போட்டார்.

டாடா நிறுவன குழுமத்தின் சேர்மன் நடராஜன் சந்திரசேகரன் மும்பையில் தனது வாக்கை செலுத்தினார். ஜெட்ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தென்மும்பையில் வாக்களித்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் குடும்பத்துடன் பாந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

வாக்களிப்பது மிகவும் முக்கியம் ஆகும். எனது பிள்ளைகள் முதல் முறை வாக்காளர்கள். அவர்களையும் ஓட்டுப்போட என்னோடு அழைத்து வந்துள்ளேன். நாங்கள் 4 பேரும் ஓட்டுப்போட்டுவிட்டோம். எல்லோரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என நான் கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தா தென்மும்பை, காமாடியா ரோட்டில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் ஓட்டுப்போட்டார்.

மும்பை வடகிழக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மனோஜ் கோடக் காலை 7.30 மணியளவில் முல்லுண்டு பகுதியில் ஓட்டுப்போட்டார். வடமத்திய மும்பை பா.ஜனதா வேட்பாளர் பூனம் மகாஜன் ஒர்லியில் உள்ள வாக்குசாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

மும்பை வடக்கு பா.ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டி குடும்பத்துடன் போரிவிலி மேற்கில் உள்ள ஜே.பி. கோட் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். வடமத்திய மும்பை காங்கிரஸ் வேட்பாளர் பிரியா தத் கணவர் ஒவன் ரோன்கோனுடன் சென்று ஓட்டுப்போட்டார்.

வட மும்பை காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா மடோங்கர் பாந்திராவில் வாக்களித்தார்.

தென்மும்பை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோரா பெடரர் ரோட்டில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கை செலுத்தினார். வடமேற்கு மும்பை காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சய் நிருபம் தனது வாக்கை ஒஷிவாராவில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார்.

தென்மும்பை தொகுதி சிவசேனா வேட்பாளர் அரவிந்த் சாவந்த் குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். தென்மத்திய மும்பை காங்கிரஸ் வேட்பாளர் ஏக்நாத் கெய்க்வாட் தாராவி காலகில்லாவில் குடும்பத்துடன் ஓட்டுப்போட்டார்.

சிவசேனா வேட்பாளர் ராகுல்செவாலே மான்கூர்டில் மனைவியுடன் சென்று ஓட்டுப்போட்டார்.

ஜனநாயக கடமையாற்றிய 108 வயது மூதாட்டி

தானே கோப்ரி கிராமத்தை சேர்ந்த விதாபாய் என்ற 108 வயது மூதாட்டி நேற்று அங்குள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். தனது கிராமத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நல்ல வேட்பாளருக்கு தனது வாக்கை பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இதேபோல் மும்பை செம்பூரை சேர்ந்த சுவர்ணாபாய் கிருஷ்ணா சுவாமி என்ற 103 வயது மூதாட்டி நேற்று அங்குள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்ய காரில் வந்தார். போலீசார் சக்கர நாற்காலி உதவியுடன் அவரை அழைத்து சென்று, வாக்கை பதிவு செய்ய உதவி செய்தனர். இவருடன் 5 பேரன்கள், 2 பேத்திகள் உள்பட 15 பேரும் அங்கு வந்து வாக்களித்தனர்.

1 கி.மீ. தூர வரிசையில் நின்ற வாக்காளர்கள்

காந்திவிலி மகாவீர் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் நேற்று காலை முதல் திரண்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல அங்கு பெருமளவில் வாக்காளர்கள் திரண்டதால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திணறினர். மேலும் அங்கு பலத்த சோதனைக்கு பிறகு ஒருவர் பின் ஒருவராக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சுமார் 1 கி.மீ. தூரம் வரையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. 

வரிசையில் நின்று வாக்களித்த ராஜ் தாக்கரே

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மும்பை தாதர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று குடும்பத்துடன் சிவாஜி பார்க்கில் உள்ள பள்ளியில் வாக்களிக்க சென்றார். அப்போது அங்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதில், மூத்த குடிமகள் என்பதால் ராஜ் தாக்கரேயின் தாயார் மட்டும் வரிசையில் நிற்காமல் வாக்களித்தார். ராஜ் தாக்கரே, அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் சுமார் 2 மணி நேரம் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

யாரோ கள்ளஓட்டு போட்டு சென்றதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பெண்

கார் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் ஜோரபி (வயது55). இவர் நேற்று கார் தான்டா பகுதியில் மாநகராட்சியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற சென்றார். அப்போது இவரது ஓட்டை வேறொருவர் போட்டு சென்றுவிட்டதாக தேர்தல் ஊழியர்கள் கூறினர். இதையடுத்து அவர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

Next Story