திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம், கணவரே அடித்துக் கொன்று நாடகமாடியது அம்பலம்
திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் இறந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை, கணவரே அடித்துக் கொன்று விட்டு நாடகமாடியது சப்-கலெக்டர் விசாரணையில் அம்பலமானது. விருத்தாசலம் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த க.இளமங்கலத்தை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்தீபன்(வயது 27). தொழிலாளி. இவருக்கும், விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டையை சேர்ந்த சிவப்பிரியா(26) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் சிவப்பிரியா கடந்த மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்த்தீபனை கைது செய்தனர். பின்னர் அவரை விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்.
திருமணமான 7 மாதத்தில் சிவப்பிரியா இறந்ததால், இது சம்பந்தமாக சப்-கலெக்டர் பிரசாந்த் விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையில், பார்த்தீபன் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, சிவப்பிரியாவை அடித்து கொலை செய்துவிட்டு அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் தெரியவந்தது. மேலும், சிவப்பிரியாவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதோடு, இந்த கொலைக்கு பார்த்தீபனின் தாய் கவுரி (50), சகோதரிகள் பானுமதி, நளினி ஆகியோரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இது தொடர்பான அறிக்கையை சப்-கலெக்டர் பிரசாந்த் நேற்று வெளியிட்டார். அதன்அடிப்படையில் சிவப்பிரியா இறந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றினர். பின்னர் கவுரியை போலீசார் கைது செய்தனர். மேலும் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பார்த்தீபனை கொலை வழக்கில் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story