கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரெயில் மீது பாட்டில் வீசியதில் ‘கார்டு’ காயம்


கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரெயில் மீது பாட்டில் வீசியதில் ‘கார்டு’ காயம்
x
தினத்தந்தி 30 April 2019 3:30 AM IST (Updated: 30 April 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இருந்து நாகர்கோவில் சென்ற ரெயில் மீது பாட்டில் வீசியதில் ‘கார்டு’ காயம் அடைந்தார்.

கோவை,

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டது. அந்த ரெயில் அவினாசி மேம்பாலத்தை தாண்டி சென்று கொண்டு இருந்தது. அப்போது தண்டவாளம் அருகே நின்று கொண்டு இருந்த மர்ம நபர் அந்த ரெயில் மீது பாட்டிலை வீசியுள்ளார்.

இதில் அந்த பாட்டில் ‘கார்டு’ பெட்டியில் விழுந்தது. இதில் பாட்டில் உடைந்து சிதறியதில் அங்கு பணியில் இருந்த ‘கார்டு’ மகேந்திரன் காயம் அடைந்தார். இதற்கிடையில் அந்த ரெயில் வடகோவை ரெயில் நிலையம் சென்றது. அங்கு ‘கார்டு’ மகேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மகேந்திரன் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயில் மீது பாட்டில் வீசியவர்களை தேடி வருகிறார்கள்.

கோவையில் இரவு நேரங்களில் ரெயில் தண்டவாளப்பகுதி ஓரங்களில் சிலர் அமர்ந்து மது குடிக்கிறார்கள். போதை தலைக்கேறியதும் ரெயில்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.இதுதவிர சில வாலிபர்கள் விபரீதம் புரியாமல் குறும்புத்தனமாக ரெயில்கள் மீது கற்கள் வீசுவதும் உண்டு.இதில் பயணிகள் காயம் அடைகிறார்கள். இதைத்தொடர்ந்து இரவு நேரங்களில் தண்டவாளப்பகுதியில் ரெயில்வே போலீசார் தீவிர ரோந்து செல்ல உத்தரவிடப்பட்டது. அப்படியிருந்தும் ரெயில்கள் மீது கற்கள் வீசும் சம்பவங்களை தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு ரெயில் மீது பாட்டில் வீசியதில் கார்டு காயம் அடைந்துள்ளார்.

இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசார் கூறியதாவது:-

இரவு நேரங்களில் ரெயில்கள் மீது கற்களை வீசுபவர்களை கண்டுபிடித்து கைது செய்வதில் சிரமம் உள்ளது. இதற்கு காரணம் இரவு முழுவதும் ரெயில்கள் சென்று வருவதால் கற்கள் வீசுபவர்களை கண்காணிப்பது இயலாத காரியம். இருந்தபோதிலும் ரெயில்கள் மீது கற்களை வீசுபவர்களை விரைவில் பிடித்து விடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story