விருத்தாசலத்தில், குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விருத்தாசலத்தில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதை உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினி குடிநீர் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பொது மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
மேலும் சிலர் பொது குடிநீர் குழாயில் மின்மோட்டார்களை பொருத்தி தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதனால் பொது மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். குடிநீர் பிடிக்க காலி குடங்களுடன் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து வருகின்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் விருத்தாசலம் ஆலடி சாலை சந்திப்பு அருகே பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. அந்த உடைப்பு வழியாக குடிநீர் வீணாக வெளியேறி சாலையோரத்தில் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. மேலும் உடைந்த குழாய் வழியாக கழிவு நீரும் கலக்கின்றது.
இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் அப்பகுதி மக்களுக்கு காலரா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து புகார் தெரிவித்த பின்பும் நகராட்சி அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story