கோவை நிதிநிறுவனத்தில், ரூ.2 கோடி நகை கொள்ளை வழக்கில் 200 பவுன் நகை மாயம் - சினிமா பாணியில் தடயங்களை மறைத்தது அம்பலம்


கோவை நிதிநிறுவனத்தில், ரூ.2 கோடி நகை கொள்ளை வழக்கில் 200 பவுன் நகை மாயம் - சினிமா பாணியில் தடயங்களை மறைத்தது அம்பலம்
x
தினத்தந்தி 2 May 2019 4:45 AM IST (Updated: 1 May 2019 10:17 PM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி நகை கொள்ளைவழக்கில் கள்ளக்காதல் ஜோடி கைதான நிலையில், கொள்ளைபோன நகையில், 200 பவுன் மாயமாகி உள்ளது. மேலும் சினிமா பாணியில் தடயங்களை மறைத்து இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை ராமநாதபுரத்தில் உள்ள முத்தூட் மினி நிதிநிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 803 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கோவை போத்தனூரை சேர்ந்த பெண் ஊழியர் ரேணுகா தேவி(வயது26), சத்தியமங்கலத்தை சேர்ந்த அவரது கள்ளக்காதலன் சுரேஷ்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ரேணுகா தேவியின் கணவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். சுரேசுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ரேணுகா தேவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஒரு செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு ‘சிம்கார்டு’ வாங்க வந்த சுரேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி இருவரும் ஜாலியாக இருந்தனர். பட்டதாரியான சுரேஷ் பங்கு சந்தையில் முதலீடு செய்து லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். இதனால் அவருக்கு ரூ.20 லட்சம் வரை கடன் ஏற்பட்டது. வட்டி கட்ட முடியாமலும், கடனை அடைக்க முடியாமலும் திணறினார்.

இதற்கிடையே ரேணுகா தேவி முத்தூட் மினி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவரை பார்க்க சென்றபோது நிதிநிறுவனத்தில் தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைத்து பணம் பெற்று செல்வதை சுரேஷ் கண்டார். இதைபார்த்த அவருக்கு நிதி நிறுவனத்தில் உள்ள நகைகளை கொள்ளையடித்தால் கடனை அடைத்து விட்டு, ஒரே நாளில் பணக்காரனாகி விடலாம் என்ற விபரீத எண்ணம் தோன்றியது.

கொள்ளை திட்டத்தை ரேணுகாதேவியிடம் கூறியபோது முதலில் அவர் மறுத்தார். ஆனால் கொள்ளை திட்டத்துக்கு உடன்படாவிட்டால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ரேணுகாதேவியின் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் ரேணுகா தேவி கொள்ளை திட்டத்துக்கு உடன்பட்டதோடு, தக்கசமயத்தை நானே சொல்கிறேன் என கூறி உள்ளார்.

ரேணுகா தேவியுடன் பணி புரிந்த பெண் ஊழியருக்கு சுரேசை தெரியும் என்பதால் அவர் இல்லாத அன்று கொள்ளையடிக்கலாம் என காத்திருந்தனர். சம்பவத்தன்று அந்த பெண் ஊழியர் விடுமுறையில் செல்லவே மாற்று ஊழியராக செல்வபுரம் கிளையில் பணிபுரிந்த திவ்யா பணிக்கு வந்தார். அன்று கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.

அதன்படி மதியம் 2 மணி அளவில் இருவரும் சேர்ந்து சாப்பிட்டபோது ரேணுகாதேவி, திவ்யாவின் சாப்பாட்டில் மயக்கமருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் திவ்யாவுக்கு சிறிது மயக்கம் ஏற்பட்டது. உடனே ரேணுகா தேவி காபி வாங்கி கொடுத்தார். அதிலும் மயக்க மருந்தை கலந்துள்ளார்.

திவ்யா காபி குடித்ததும் கிறங்கி மேஜையிலேயே படுத்துவிட்டார். அப்போது ரேணுகா தேவி தனது செல்போனில் இருந்து காதலன் சுரேசுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் திவ்யா மயக்கத்தில் இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் ‘பூனை பால் குடிச்சிருச்சு, பூனை தூங்கிடுச்சு’ என குறிப்பிட்டுள்ளார். அதைப்பார்த்த பின்னர்தான் சுரேஷ் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக்கொண்டு நிதி நிறுவனத்துக்குள் புகுந்தார். அவர் முகத்தை மறைத்து வருவதை பார்த்த திவ்யா அரை மயக்கத்தில் இருந்த நிலையிலேயே நீங்கள் யார்? ஏன் முகத்தை மறைத்துள்ளர்கள்? என கேட்டதும் சுரேஷ் அவரை ஓங்கி அறைந்துள்ளார். இதனால் அவர் மயக்கம் போட்டு விழுந்ததும் திட்டமிட்டபடி நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

சுரேசின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகும். அங்கு அவரது தந்தை நகைபட்டறை நடத்தி வந்தார். சுரேஷ் கொள்ளையடித்த நகைகளை மாடியில் உள்ள தனது அறைக்குள் கொண்டு சென்று அனைத்து நகைகளையும் நள்ளிரவு 1 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றினார். பின்னர் அவற்றை சாமி படங்களுக்குள்ளும், குளியல் அறையில் உள்ள சுவிட்ச்-பாக்சுக்குள்ளும் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் ஒன்றும் நடக்காதது போல கோவை திரும்பி விட்டார். ஆனால் சம்பவ இடத்தில் விசாரித்த போலீசாருக்கு ரேணுகாதேவியின் பேச்சில் சந்தேகம் ஏற்பட்டது. அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளை சேகரித்து விசாரித்தபோது அவர் தனது கள்ளக்காதலன் சுரேசுடன் சிக்கிவிட்டார். உடனே சுரேசை கைது செய்த போலீசார் ஈரோடு அழைத்து சென்று அவரது வீட்டில் இருந்து 600 பவுன் எடை கொண்ட தங்ககட்டிகளை மீட்டனர். இதைத்தொடர்ந்து சுரேஷ், ரேணுகாதேவி ஆகியோரை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

நிதிநிறுவனத்தில் இருந்து 803 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் கொடுத்திருந்தனர். ஆனால் கொள்ளையடித்த முழு நகைகளையும் உருக்கிவிட்டதாகவும் அதில் இவ்வளவுதான் இருந்தது என சுரேஷ் வாக்குமூலத்தில் கூறி உள்ளார். எனவே மீதி தங்க கட்டிகள் எங்கே? என்ற குழப்பம் நிலவுகிறது. 200 பவுன் எடை கொண்ட தங்க கட்டிகளை சுரேஷ் மறைத்து வைத்து நாடகமாடுகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சுரேசை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக இன்னும் ஓரிருநாளில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்

இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து கொடுத்த சுரேஷ், போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடிப்பது எப்படி? என்ற விவரங்களை அவர் இணையதளத்தில் பார்த்து தகவல்களை சேகரித்துள்ளார். கொள்ளையடிக்க செல்லும்போது மோட்டார் சைக்கிளில் சென்றால் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் எளிதில் சிக்கி கொள்வோம் என்பதை தெரிந்து கொண்ட அவர் வீட்டில் இருந்து பஸ்சிலேயே நிதி நிறுவனம் அமைந்துள்ள பகுதிக்கு சென்றுள்ளார்.

பஸ்சில் இருந்து இறங்கியதும் முகத்தை கைக்குட்டையால் மறைத்துக் கொண்டு நிதிநிறுவனத்துக்கு சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டபடி நகைகளை கொள்ளையடித்ததும் அவற்றை விற்க கொண்டு சென்றாலும் போலீசார் எளிதில் மோப்பம் பிடித்து கைது செய்து விடுவார்கள் என கருதிய சுரேஷ் அவற்றை வீட்டுக்கு கொண்டுசென்று உருக்கி விட்டார். பின்னர் ‘அயன்’ சினிமா பாணியில் தங்க கட்டிகளை சாமி படத்துக்குள்ளும், குளியலறை சுவிட்ச்-பாக்சுக்குள்ளும் மறைத்து வைத்துள்ளார். பின்னர் கோவை வந்து கொள்ளை நாடகத்தில் காயம் அடைந்ததுபோல் நாடகம் ஆடியதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட காதலி ரேணுகாதேவியை, தனியார் மருத்துவமனையில் சுரேஷ் சந்தித்துள்ளார். கொள்ளை திட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளதால் நகையை விற்று ரூ.1 கோடியை சுரேஷ் எடுத்துக்கொள்வதாகவும், ரூ.50 லட்சத்தை கள்ளக்காதலிக்கு கொடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையில் போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி இருவரையும் கைது செய்து விட்டனர்.

சுரேஷ் கொள்ளையடிக்க சென்ற போது அணிந்திருந்த உடை, தொப்பி, கைக்குட்டை, செருப்பு அனைத்தையும் கோவை வாலாங்குளத்துக்கு கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து விட்டதாகவும் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

நிதி நிறுவன நகை கொள்ளையில் கள்ளக்காதல் ஜோடி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story