சிவகங்கை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய் -2 குழந்தைகள் பலி


சிவகங்கை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய் -2 குழந்தைகள் பலி
x
தினத்தந்தி 2 May 2019 5:00 AM IST (Updated: 2 May 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து தாய் மற்றும் 2 குழந்தைகள் பலியானார்கள்.

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.உத்தம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 30). விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னம்மாள் (29). இவர்களது குழந்தைகள் வீரன் (5), திவ்யவர்ஷினி (3).

கருப்பையா தனது மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை கருப்பையாவும், அவரது பெற்றோரும் விவசாய வேலைக்கு சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனை கவனிக்காத சின்னம்மாள் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்துள்ளார். இதில் பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சின்னம்மாள், குழந்தைகள் வீரன், திவ்யவர்ஷினி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக புழுதிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story