சிவகாசி அருகே குழாயில் உடைப்பால் வீணாகும் குடிநீர்
சிவகாசி அருகே குழாயில் உடைப்பால் குடிநீர் வீணாகி வருகிறது.
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அதிகஅளவில் குடிநீர் பிரச்சினை இருந்து வருவதால் அரசு சார்பில் மானூரில் இருந்து ராட்ச குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு சிவகாசி ஊராட்சி பகுதியில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாரணாபுரம் பகுதியில் நகராட்சி குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு அதில் குடிநீர் சேமிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள 30–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தற்போது தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தற்போது சில இடங்களில் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. செங்கமலப்பட்டி பகுதியில் மட்டும் 5–க்கும் அதிகமான இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாகி வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடைக்காலம் தொடங்கி விட்ட நிலையில் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் சரி செய்யும் பணியை அதிகாரிகள் உடனே செய்ய வேண்டும். அதற்கு தேவையான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும்.