3 ஆண்டுகளில் நடந்த பணிகள் என்னென்ன? கவர்னர் கிரண்பெடி பட்டியல்
கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பணிகளை கவர்னர் கிரண்பெடி பட்டியலிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி மாநில அரசு நிர்வாகத்தின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுவது தொடர்பாக முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய ஐகோர்ட்டு, புதுச்சேரி கவர்னருக்கு என்று சிறப்பு அதிகாரம் ஏதும் இல்லை எனவும் அமைச்சரவையின் முடிவின்படிதான் செயல்பட வேண்டும் என்று கூறியது.
ஐகோர்ட்டின் தீர்ப்பினை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி நேற்று கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பணிகளாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
புதுவை கடற்கரை, வீதிகள், தெருக்கள், கழிவுநீர் வாய்க்கால்கள் பொதுப்பணித்துறை, நகராட்சி, ஸ்வச்தா ஊழியர்களால் தூய்மைப்படுத்தப்பட்டு உள்ளது. இளைஞர்களிடையே தன்னார்வல பணிகள் ஊக்குவிக்கப்பட்டு உள்ளன. பொதுமக்களின் குறைகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கவர்னர் மாளிகை பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்டது.
மின்துறை, நகராட்சிகளில் பழைய வரி பாக்கிகள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு நீதித்துறையின் தலையீட்டின் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டது. நில அபகரிப்புகளுக்கு முடிவு கட்டப்பட்டு உள்ளது. சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
ஊழியர்கள் நியமனம், தகுதி அடிப்படையிலும், சீனியாரிட்டி அடிப்படையிலும் நடந்துள்ளது. 14 லட்சம் மக்களுக்கான ரூ.7,500 கோடி பட்ஜெட் மத்திய நிதி விதிகளின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கவர்னர் மாளிகைக்கு வரும் கோப்புகள் தொடர்பாக மக்களுக்கு சிறப்பு பணி அதிகாரி தேவநீதிதாஸ் சரியான தகவல்களை வாரந்தோறும் கொடுத்து வருகிறார்.
புதுவை சுற்றுலா பயணிகள் விரும்பும் சுத்தமான பகுதியாக மேம்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.