மே தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


மே தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 2 May 2019 5:00 AM IST (Updated: 2 May 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

மே தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார். இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மே தினத்தையொட்டி நேற்று சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சென்றனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்றும், பார்வை கோபுரத்தில் ஏறியும் காவிரி ஆற்றை அவர்கள் கண்டு ரசித்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் நடைபாதை, பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

கோடை வெயில் கொளுத்தியதால் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருந்தனர். நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் அசம்பாவிதங்களை தடுக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆலாம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்றனர். மேலும் மெயின் அருவி பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்ததால் அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.


Next Story