மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ‘வாபஸ்’ பேச்சுவார்த்தையில் உடன்பாடு


மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் ‘வாபஸ்’ பேச்சுவார்த்தையில் உடன்பாடு
x
தினத்தந்தி 1 May 2019 11:00 PM GMT (Updated: 1 May 2019 10:51 PM GMT)

மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து 3 நாட்களாக நடந்து வந்த அவர்களின் வேலைநிறுத்தம் ‘வாபஸ்’ பெறப்பட்டது.

சென்னை,

மெட்ரோ ரெயில் ஊழியர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்ட தொழிற்சங்கம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து, பணி நியமன விதிகளை மீறி, ஒழுங்கீனமாக செயல்பட்டதாக 8 ஊழியர்களை மெட்ரோ ரெயில் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. இதனால் கடந்த மாதம் 29-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சென்னை பிராட்வே அருகேயுள்ள குறளகம் கட்டிடத்தில் இயங்கி வரும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதையடுத்து, மே தின விடுமுறையான நேற்றும் பேச்சுவார்த்தை நடந்தது. மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை தொடங்கியது.

இதில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். மெட்ரோ ரெயில் நிலையத்தின் சார்பில் தலைமை பொதுமேலாளர்கள் ராஜரத்தினம், வி.கே.சிங், ஊழியர்கள் சார்பில் சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை இரவு 8.30 மணிக்கு முடிவடைந்தது.

4½ மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள மெட்ரோ ரெயில் ஊழியர்கள் முன்வந்தனர்.

இதுதொடர்பாக சி.ஐ.டி.யூ. மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் பேச்சுவார்த்தையில், வேலையில் இருந்து நீக்கப்பட்ட 8 பேரை மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முக்கியமாக வலியுறுத்தினோம். ஆனால் இதனை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஏற்கவில்லை.

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர ஏதேனும் ஒரு சமரச முயற்சியை எடுத்தாக வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் முன்வைத்தார். வேலையில் இருந்து நீக்கப்பட்ட 8 பேரும் முறைப்படி மேல்முறையீடு செய்யலாமே... என்று அவர் எங்களிடம் கூறினார். உங்களுக்கு ஏற்ற நல்ல முடிவு எடுத்து இந்த பிரச்சினையை தீர்த்து வைப்போம் என்று மெட்ரோ ரெயில் நிறுவன மேலாளரிடம் ஒப்புதல் பெற்று அவர் தெரிவித்தார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை கூடாது என்று கோரிக்கையை முன்வைத்தோம். தொழிலாளர் துறையும் இதற்கு சம்மதித்தது.

அந்த அடிப்படையில் எங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம். எங்கள் இதர கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது. தொழிலாளர் துறை வாரம் ஒருமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தி இதனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

தற்போது கூட 3 பேர் பணியில் இருந்து இடைநீக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்கள் மீது சேவையை வேண்டுமென்றே பாதித்தாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே அதை இந்த சூழ்நிலையில் வலியுறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டோம். நிச்சயம் அந்த 3 பேரையும் தொழிற்சங்கம் காப்பாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன்மூலம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த மெட்ரோ ரெயில்வே ஊழியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே ‘2-ந் தேதி (இன்று) அதிகாலை 4.30 மணி முதல் அனைத்து மெட்ரோ ரெயில் வழித்தடங்களிலும் வழக்கமான கால அட்டவணையில் ரெயில்கள் இயக்கப்படும்’ என்று மெட்ரோ ரெயில் நிறுவனம் நேற்று மாலை அறிவித்தது.

முன்னதாக, ரெயில்களை இயக்குவதற்கான சிக்னல் அமைப்பில் தவறான கட்டளையை கொடுத்ததாகவும், ரெயில் சேவைகளுக்கு தடங்கல் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டதாகவும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் ஆர்.மனோகரன், கே.பிரேம்குமார், பணிமனை கட்டுப்பாட்டாளர் சிந்தியா ரோஷன் சாம்சன் ஆகியோரை மெட்ரோ ரெயில் நிறுவனம் நேற்று பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story