ஜீவசமாதிகளை கூட விட்டுவைக்காத மணல் கொள்ளையர்கள் - நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பு


ஜீவசமாதிகளை கூட விட்டுவைக்காத மணல் கொள்ளையர்கள் - நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிப்பு
x
தினத்தந்தி 2 May 2019 5:01 AM IST (Updated: 2 May 2019 5:01 AM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட மணல் கொள்ளையர்கள் விட்டு வைக்காமல் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கம்,

செங்கம் தாலுகா கரியமங்கலம் கிராமம் செய்யாற்றுப்படுகையில் மணல் திருட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பகுதியில் உள்ள செய்யாற்றங்கரையில் 9 ஜீவசமாதிகள் உள்ளன. அங்குள்ள கிராம மக்கள் வழக்கமாக சென்று ஜீவசமாதிகளை வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கரியமங்கலம் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் அள்ளி பதுக்கி வைத்து விட்டு இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் மர்மநபர்கள் கடத்திச்செல்கின்றனர்.

இதனால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

இந்த நிலையில் கரியமங்கலம் செய்யாற்றுப்படுகையில் இருந்த ஜீவசமாதிகளையும் மணல் கடத்தல் கும்பல், விட்டுவைக்காமல் ஜீவசமாதிகளை அகற்றி மணல் திருட முயற்சித்து உள்ளனர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வேதனை அடைந்து உள்ளனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் வருவாய் துறையினர் ஜீவசமாதி அருகில் மணல் குவிக்கப்பட்டு இருந்ததை பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பாரம்பரியமாக வழிபட்டு வரும் ஜீவசமாதிகளை அகற்றி மணல் கொள்ளையடிக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால் நாங்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளனர். மணல் கொள்ளையர்களால் அடிக்கடி பல தொந்தரவுகள் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுகிறது.

எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கரியமங்கலம் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மணல் கொள்ளைக்கு பயன்படுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வேண்டும் என்றும் அப்பகுதியில் நிலத்தடி நீரை சேமிக்க வழி வகுக்க வேண்டும் என்றும், ஜீவசமாதிகளுக்கு அருகில் உள்ள சித்தர் கோவிலை புதுப்பிக்க வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story