கொலை வழக்கில் தலைமறைவானவரை கைது செய்ய வலியுறுத்தி, நடுரோட்டில் விவசாயி உடலை வைத்து உறவினர்கள் மறியல்
வந்தவாசி அருகே விவசாயி கொலை வழக்கில் தலைமறைவான வாலிபரை கைது செய்யக்கோரி உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
வந்தவாசி,
வந்தவாசி தாலுகா அறுவடைத்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 57) விவசாயி. இவருக்கும் இவரது தம்பி தாமோதரனுக்கும் (55) தங்கள் நிலத்தையொட்டியுள்ள புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பதில் பிரச்சினை இருந்து வந்தது.
இந்த நிலையில் பாலாஜி கடந்த 29-ந்தேதி இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பராயனுடன் சேர்ந்து தனது நிலத்தில் மாந்திரீக பூஜையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதை அறிந்து அங்கு வந்த தாமோதரன், அவருடைய மனைவி சாந்தா (46) மகன் அமர்நாத் (25) ஆகியோர் பூஜைக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் 3 பேரும் சேர்ந்து கத்தி, இரும்புக் குழாய் ஆகியவற்றால் பாலாஜியை தாக்கினர். இதில் பாலாஜி இறந்து விட்டார்.
இதுபற்றி பாலாஜியின் மகன் மாரிமுத்து 3 பேர் மீது தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் தாமோதரன், அவரது மனைவி சாந்தா ஆகியோரை கைது செய்தார். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள அமர்நாத்தை கைது செய்ய வலியுறுத்தி, பாலாஜியின் உறவினர்கள் அவருடைய உடலை நேற்று வந்தவாசி-திண்டிவனம் சாலையில் அறுவடைத்தாங்கல் கூட்டுச்சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார் (தெள்ளார்), பிரகாஷ் (தேசூர்) மற்றும் போலீசார் அங்கு சென்று காலையிலேயே அமர்நாத் கைது செய்யப்பட்ட விவரத்தை கூறினர். இதனை தொடர்ந்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். சாலைமறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story