திருவள்ளூர் அருகே பரிதாபம் ரெயில் மோதி என்ஜினீயர் பலி; துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை


திருவள்ளூர் அருகே பரிதாபம் ரெயில் மோதி என்ஜினீயர் பலி; துக்கம் தாங்காமல் தந்தை தற்கொலை
x
தினத்தந்தி 2 May 2019 11:00 PM GMT (Updated: 2 May 2019 5:26 PM GMT)

திருவள்ளூர் அருகே ரெயில் மோதி என்ஜினீயர் பலியானார். துக்கம் தாங்காமல் அவரது தந்தையும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு சத்திரம் பஜ்ரங் கல்லூரி சாலையை சேர்ந்தவர் கோபால் (வயது 51). அதே பகுதியில் டி.வி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருக்கு கோகிலா (44) என்ற மனைவியும், சுரேந்தர்(24) என்ற மகனும், ஷாலினி(23) என்ற மகளும் இருந்தனர்.

சுரேந்தர் என்ஜினீயரிங் படித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஷாலினிக்கு திருமண ஏற்பாடு நடந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுரேந்தர் திருநின்றவூர்-வேப்பம்பட்டு ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக இறந்து போனார். இதற்கிடையே சுரேந்தர் வீட்டிற்கு வராததால் அவரை பல இடங்களில் கோபால் தேடினார்.

இந்த நிலையில் வேப்பம்பட்டு அருகே தனது மகன் சுரேந்தர் ரெயில் மோதி இறந்து கிடப்பதை பார்த்த கோபால் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடலை பார்த்து அவர் கதறி அழுதார். தனது மகன் இல்லாமல் தான் மட்டும் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்? என்று கோபால் நினைத்தார்.

வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்த அவர், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். கணவன், மகன் இறந்த தகவல் கேட்டு கோகிலா மற்றும் அவரது மகள் ஷாலினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரது உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

அப்போது அவர்கள் இனிமேல் நாங்களும் உயிருடன் இருந்து என்ன பயன்? எனக்கூறி தாயும்-மகளும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள ஓடினார்கள். அப்போது அங்கிருந்த ரெயில்வே போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி ஆறுதல் கூறினார்கள். பின்னர் உறவினர்களை வரவழைத்து அவர்களிடம் இருவரையும் பத்திரமாக ஒப்படைத்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரெயில் மோதி மகன் இறந்த துக்கம் தாங்காமல் தந்தையும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேப்பம்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story