மாவட்ட செய்திகள்

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி சாவு, தனியார் தேயிலை எஸ்டேட் காவலாளி கைது + "||" + Collapse wire Cheetah caught in death, Private tea estate guard detained

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி சாவு, தனியார் தேயிலை எஸ்டேட் காவலாளி கைது

சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி சாவு, தனியார் தேயிலை எஸ்டேட் காவலாளி கைது
மஞ்சூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி பரிதாபமாக இறந்தது. இதுதொடர்பாக தனியார் தேயிலை எஸ்டேட் காவலாளி கைது செய்யப்பட்டார்.
மஞ்சூர்,

மஞ்சூர் அருகே குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட கோட்டக்கல் பகுதி உள்ளது. இப்பகுதியில் தனியார் தேயிலை எஸ்டேட்டில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது தேயிலை தோட்டத்தின் ஒரு பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தைப்புலி பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுத்தைப்புலியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர்கள் நந்தினி, ஸ்ரீநிதி ஆகியோர் மேற்பார்வையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் இறந்தது பெண் சிறுத்தைப்புலி என்றும், சுமார் 3 வயது இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, தனியார் தேயிலை எஸ்டேட் காவலாளி ராஜேந்திரன் (வயது 56) என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

விசாரணையில், தேயிலை எஸ்டேட் பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடுவதற்கு காவலாளி ராஜேந்திரன், அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து சுருக்கு கம்பியை வைத்ததாக தெரிவித்தார். இதில் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.