அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்


அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்
x
தினத்தந்தி 3 May 2019 4:00 AM IST (Updated: 3 May 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

கீழக்குறிச்சி, மலைக் குடிப்பட்டியில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அன்னவாசல்,

அன்னவாசல் அருகே கீழக்குறிச்சியில் வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் வீரகாளியம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து இரவு பொங்கல் வைத்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். அதனை தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் திருவிழா முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

இதேபோல் இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டியில் உள்ள மாதவாராகி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர். 

Next Story