நாகர்கோவிலில் தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர் கைது


நாகர்கோவிலில் தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 3 May 2019 3:45 AM IST (Updated: 3 May 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 44). இவருடைய மகன் நவீன்ராஜா, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிளஸ்-1 படிப்பதற்காக அதே பள்ளியில் விண்ணப்பித்து உள்ளார்.

ஆனால் நவீன்ராஜா மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்ததால் அந்த பள்ளியில் சேர்க்க பள்ளி நிர்வாகம் காலதாமதம் செய்ததாக தெரிகிறது. அதே சமயத்தில் 2 நாட்களுக்கு பிறகு கட்டாயம் சேர்க்கைக்கான அனுமதி வழங்குவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் மீது தாக்குதல்

இந்த நிலையில் நாகராஜன் நேற்று அந்த பள்ளிக்கு சென்று தன் மகனை உடனே பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை தட்டிக்கேட்ட ஆசிரியர் சுப்பிரமணியபிள்ளை என்பவரை அவர் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த சுப்பிரமணியபிள்ளை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீஸ் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் நாகராஜன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story